
--------------------------தீபச்செல்வன்
________________________________________
------------------------------------------------------------------
எனது முகத்தின் வெளியில்
மெளனம் ஒட்டப்பட்டிருந்தது.
எனது குரலை மடித்து
புத்தகத்தின் நடுவில்
ஒளித்து வைத்திருக்கிறேன்.
ஒரு சிறுவன் மீது
இராணுவம் துன்புறுத்தி
தாக்கியதைக் கண்டேன்.
ஒரு முதியவர் மீது
இராணுவம் துன்புறுத்தி
தாக்கியதைக் கண்டேன்.
எனது வெள்ளைச் சீருடைகளின்
நிறங்கள்
உதிர்ந்து விழுந்தன.
எனது கண்களின் மீது
படர்ந்திருத்த
அந்த வன்முறைக்காட்சிகள்
இமைகளை அரித்து
விழிகளை குடைந்தன.
குருதி ஓட்டத்தில்
முளைத்திருந்த உலகம்
கரைந்து தொலையத் தேடினேன்.
அவர்களுக்கு.. எனக்கு..
என்று நீளுகிற
அந்த சீருடைகளின்
கொலுத்த அதிகாரம்
எனது இனம்
முழுவதுமாய் பரவுகிறது.
நமது குழந்தைகளின்
முகங்களை குத்துமளவில்
நீண்டு கூர்மையாயிருந்தது.
நிறைக்கப்பட்ட துப்பாக்கிகளின்
களியாட்டம்
சிறிய சைக்கிளில் போகும்
சிறுமி மீதான குறியாயிருந்தது.
எல்லோருடைய முகங்களும்
சுருங்கியிருக்க
தீராத வலிகள்
எழுதப்பட்டிருந்தன.
மனித நேயமும் உரிமைகளும் பற்றி
பாடம் நடத்தப்படட்ட
வகுப்பறையின்
கூரைகளிலும் சுவர்களிலும்
கிழிந்த புன்னகையோடு
எலும்புக்கூடுகள் வரைந்து
நிறைக்கப்பட்டிருந்தன
புத்தகத்தின் நடுவில்
வைத்திருந்த எனது குரல்
சைக்கிளில் சென்ற
சிறுமியைப் போல
கரைந்து கிடக்கிறது.
------------------------------------------
1 comment:
வலியுரைக்கும் கவிதை..
நன்றாக இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.
Post a Comment