Wednesday, December 19, 2007

ஒற்றைகையின் குறிப்பு

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
னது முகத்தை
நான் பறிகொடுத்துவிட்டேன்
பதுங்குகுழியின்
அழுகையின் ஓரத்தில்
உனது புன்னகை
எறிந்து கிடக்கிறது.

பதுங்கு குழிக்காக
எல்லோரும்
நிலத்தை அளவெடுக்கிறார்கள்
அதன் இன்றைய
பொய்மையில்
உனது தோற்றம்
சிதறி கிடக்கிறது.

உனக்கு ஒரு விமானம்
உனது தம்பிக்கு
ஒரு விமானம்
ஆளுக்கு நான்கு குண்டுகள்
மொத்தம்
இருபது குண்டுகளுக்கு
உனது குடும்பம்
பதிலளித்திருக்கிறது.

நீ ஒரு மாணவனாக
இருக்கலாம்
உன்னோடு
உனது வெள்ளைச்சீருடை
புத்தகங்கள்
பேனாக்கள் மீதெல்லாம்
உனது இன அடையாளத்தின்
அடிப்படையிலேயே
குண்டு வீசப்படும்.

தேசிய பாதுகாப்பு
என்கின்ற அட்டவணையின்
வரிசையில் இன்று
நீஇ உனது குடும்பம்
தெரிவுசெய்யப்பட்டு
அழிக்கப்பட்டிருக்கிறது.

இனி நீ அணிந்திருந்த
வெள்ளை சீருடையும்
வைத்திருந்த புத்தகங்களும்
மறைக்கப்பட்டு
ஆயுதம் தரித்திருந்தவனாகவே
கருதப்படுவாய்
உனது வீட்டினுள்ளிருந்து
அவர்களின் தேசிய பாதுகாப்பை
அச்சுறுத்தும்படி
நடமாடியவனாகவே
பார்க்கப்படுவாய்.

உனது அப்பாவித்தனமான
குருதியை திருகி
குடித்து
ஏப்பமிடுகிறது
அதிகாரம் தங்கிய
ஜனநாயகம்.
-----------------------------------------

01.11.2006 அன்று என் வீட்டிற்கு அருகில்
இலங்கை அரச விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பின் புறமாக
இடம்பெற்ற இந்தத்தாக்குதலில்
எனது கல்லூரியைச்சேர்ந்த(கிளிநொச்சி।மத்திய கல்லூரி) மாணவரான ச.கிருசாந்தன் பலியாக்கப்பட்டிருப்பதை இந்தப்படத்தில் காணலாம். அவருன் அவரது சகோதரன் மாணவன் ச.சசிக்குமார் உட்பட வீட்டார் ஜந்து போர் கொல்லப்பட அவர்களின் வீடு காணி என்பனவுடன் குடும்பம் தரைமட்டமாய் அழிந்தன.
விடுதலைப்புலிகளின் இலக்குகள் தாக்கியழிக்கப்பட்டதாகவும் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் எனவும் இராணுவப்பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத்சமரசிங்க கூறுகிறார்.
------------------------------------------------------------------------------------------

No comments: