Tuesday, December 11, 2007

இரவு மீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
தூரம் நீண்டிருக்கிறது

இரவுமீது ஒருசிவப்புப் பறவை
வந்து அமர்ந்திருக்கிறது
எனது உணவுத்தட்டில்
தண்ணீர் காய்ந்திருக்கிறது.

அம்மாவின்
சிரட்டையிலான அகப்பை
பாவனையற்று
பரணியில் வறண்டு கிடக்கிறது.

நூலகத்தோடு
முடிவடையும் வீதியில்
வெறும் சன்லைட்டுப் பைகள்
கிடக்கின்றன.

தொலைத்தொடர்பு கம்பிகளிற்குள்
அடையாள அட்டை
சொருகிய முகங்கள்
அழைப்பிற்க்காய் காத்திருக்கின்றன.

அம்மாவின் அழைப்பு
வந்து திரும்பிப் போகிறது.

மேலதிக விலையில்
வாங்கப்பட்ட
போனா அடிக்கடி
விழுந்து உறங்குகிறது
எழுத்துக்கள் சிறுத்து
பெருகிக்கொண்டிருக்கின்றன.

நடுங்கிக்கொண்டிருக்கும்
கை விரல்களின்
நகங்களின் நிறம்
வெளுக்கிறது.

மேசையில் குவிந்திருக்கும்
புத்தகங்களிற்கிடையில்
மிகத்தாமதமாக
கிடைக்கப்பெற்ற
தங்கையின் கடிதம்
மீண்டும் வாசிக்க கிடக்கிறது.

இன்றோடு தீரும்
சிறிய துண்டு
மெழுகு வர்த்தியின்
சுவாலையின் கடைசித்துளி மீதில்
ஒரு வெள்ளைவான்
ஒளிந்திருக்கிறது.
-----------------------------------------------------------

2 comments:

Shanmugampillai Jayapalan ஜெயபாலன் V.I.S.Jayapalan said...

இன்றோடு தீரும்
சிறிய துண்டு
மெழுகு வர்த்தியின்
சுவாலையின் கடைசித்துளி மீதில்
ஒரு வெள்ளைவான்
ஒளிந்திருக்கிறது.

மனசை ஊடுருவுகிறதடா கவிஞனே நாங்கள் வாழ்ந்த நீங்கள் வாழும் யாழ்பாணப் பால்கலைக் களக யதார்த்தம்
வ.ஐ.ச.ஜெயபாலன்

Theepachelvan said...

நன்றி ஜெபாலன் உங்கள் கருத்து தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வருகிறது.
---தீபச்செல்வன்