Monday, December 31, 2007

பயங்கர வாதிகளும் பதுங்குகுழிகளும்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

01
காலாவதியான ஒரு
கொக்கக்கோலாவை சுற்றி
எறும்புகள் சூழ்ந்திருந்தன.

எனது வஸ்திரங்கள் கரைய
அதிகாரத்தின் முன்
நிருவாணமாய் நின்றிருந்தேன்
அது என்னை அடிமையாக்கி
பயங்கரவாதி என அழைத்தது.

புரட்சி ஒன்றின் விளிம்பில்
அடிமை பீடிக்கிறதை
நான் உணர்ந்தேன்
கூச்சலிட்டு சொல்லி உதருகிறேன்.

சனங்கள் நிறைந்த
எனது கிராமத்தின் மேலாக
வேக விமானம் ஒன்றை
உக்கிரேன் விமானி ஓட்டுகிறாள்.

பயங்கரவாதிகளுக்குள்
பதுங்குகுழிகள் பதுங்குகின்றன.

குழந்தைகள்
தாய்மார்கள்
முதியவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள்
என ஜநா அறிவித்தது.

நான் பயங்கரவாதி என்பதை
உரத்து சொல்கிறேன்.

என்னை அமெரிக்காவின் நேர்மை
தேடிவருகிறது
ஜநா படைகளும்
அமெரிக்காப் படைகளும்
இந்தியப் படைகளும்
இலங்கைப்படைகளைப்போல
எனது தெருவுக்கு வர
ஆசைப்படுகிறார்கள்.

நான் அப்பிள் பழங்களை
புசிப்பதற்கு ஆசைப்பட்டிருக்கிறேன்.
கிரேப்ஸ் பழங்களை
உற்பத்தி செய்யத்தொடகினேன்.

நான் ஒலிவம் இலைகளை
மறந்திருந்தேன்
பேரீட்சை பழங்களை
உண்ணாதிருந்தேன்
எனது பனம்பழங்களை
இழக்க நேர்ந்தது.

ஒட்டகங்களின் முதுகில்
குவிந்திருந்த பொதிகள்
சிதைந்ததை நான் மறந்தேன்
எனது மாட்டு வண்டிகள்
உடைந்து போயின.

தலைவர்களின் இடைகளில்
எண்ணைக்குடங்கள் நிரம்பியிருந்தன
அவர்களின் கூடைகளில்
எனது பனம்பழங்கள்
நிறைக்கப்பட்டிருந்தன.

கனியின் விதை கரைய
என்மீது கம்பிகள் படர்ந்தன.

02
திருவையாற்றில் குருதி
பெருக்கெடுத்து ஓடுகிறது
பிணங்களை அள்ளிச் செல்கிறது
வெங்காயத்தின் குடில்கள்
கருகிக்கிடந்தன
தோட்டம் சிதறடிக்கப்பட்ட
செய்தியை அமெரிக்கா வாசிக்கிறது.

இரணைமடுவில் பறவைகளின்
குளிர்ந்த சிறகுகள் உதிர்ந்தன
தும்பிகளும் நுளம்புகளும்
எழும்ப அஞ்சின
இரணைமடுக்குளத்தில்
குருதி நிரம்ப பிணங்கள் சேர்ந்தன
நோர்வேயின் படகு மிதக்கிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும்
ஆயுதங்கள் பெருக
எனது ஊரின் நடுவில்
போரிட்டுக்கொண்டிருக்கிறது.

உலைப்பானைகளும்
அடுப்புகளும் சிதைய
எனது மனைவி நசிந்து கிடந்தாள்.

எனது வீதியை ஜப்பான்
சுருட்டி எடுத்தது
அமெரிக்காவும் ஜநாவும்
எனது குழந்தையை
பள்ளியோடு கொன்று விட்டது
பிரித்தானியாவின்
சிறையில் நானிருந்தேன்.

ஒரு மாம்பழத்தை தின்பதற்கு
எல்லோரும் அடிபட்டு
எனது காணியை சிதைத்தார்கள்
கத்திகளை இன்னும்
கூர்மையாக்கி வருகிறார்கள்.

இந்தியாவும் அமெரிக்காவும்
எனது தலையில்
காலுன்ற அடிபடுகிறது
சீனாவும் ரசியாவும்
எனதூர் ஆலயத்தின்
கூரைகளை பிரித்துப்போட்டது.

நான் முதலில் அமெரிக்காவிற்கு
பதில் சொல்ல வேண்டும்

கோதுமைகளுடன்
அமெரிக்காவின் கப்பல்
திருமலைக்கு வருகிறது
அமெரிக்கா எனது படத்தை
குறித்திருந்தது
ஜநா எனது குழந்தையின் படத்தை
குறித்திருந்தது.

எல்லாவற்றக்காகவும்
வலிந்து விழுங்கிய
அதிகாரங்களால்
நான் பயங்கரவாதி எனப்பட்டேன்
ஒடுக்கப்பட்டவர்களின் கூட்டத்தில்
நான் தூக்கி எறியப்பட்டேன்.

நமது ஓலங்களிற்குள்
பெருகும் குருதி ஆறுகளிற்குள்
சந்தை பரவி நிகழ்ந்தது.

அமெரிக்கா இரணைமடுவுக்கு
ஆசைப்படுகிறது.
---------------------------------

Thursday, December 27, 2007

காகத்தின் நிழலும் கிழிந்த பைகளும்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

மெலிந்த மனிதர்கள் மீது
காகங்கள் பறந்து
வற்றிக்கொண்டிருந்தன.

வாயிலிருக்கும்
மிகச்சிறிய வடையில்
ஆயிரம் இலையான்கள்
மொய்க்கின்றன.

கோப்பையில்
தேனீர் வற்றியிருக்க
மேசை வெளித்திருக்கிறது.

சோறு காய்ந்து
அழிந்து போயிருக்கும்
உணவுத்தட்டுக்களை
தெருநாய்கள்
காவிவந்து தின்கின்றன.

பழைய செய்தித்தாள்
ஒன்றில் கட்டப்பட்ட
ஒரு சோற்றுப் பார்சலை
ஜந்தாறு குழந்தைகள்
பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

சோற்றுப்பானைகள்
ஓட்டையாய்ப்போயிருக்க
தேனீர்க்கோப்பைகள்
உடைந்து போயிருக்க
வீசப்பட்டிருந்தன.

கிழிந்த பைகளோடு
மனிதர்களை
ஏற்றிய ஒரு பேரூந்து
உள் வீதிகளுக்குள் அலைகிறது.

காகங்கள்
கூரைகளை தின்கின்றன.
-------------------------------------------

Monday, December 24, 2007

எலும்புக்கூடுகள் நிறைக்கப்பட்ட வகுப்பறை

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

னது முகத்தின் வெளியில்
மெளனம் ஒட்டப்பட்டிருந்தது.

எனது குரலை மடித்து
புத்தகத்தின் நடுவில்
ஒளித்து வைத்திருக்கிறேன்.

ஒரு சிறுவன் மீது
இராணுவம் துன்புறுத்தி
தாக்கியதைக் கண்டேன்.

ஒரு முதியவர் மீது
இராணுவம் துன்புறுத்தி
தாக்கியதைக் கண்டேன்.

எனது வெள்ளைச் சீருடைகளின்
நிறங்கள்
உதிர்ந்து விழுந்தன.

எனது கண்களின் மீது
படர்ந்திருத்த
அந்த வன்முறைக்காட்சிகள்
இமைகளை அரித்து
விழிகளை குடைந்தன.

குருதி ஓட்டத்தில்
முளைத்திருந்த உலகம்
கரைந்து தொலையத் தேடினேன்.

அவர்களுக்கு.. எனக்கு..
என்று நீளுகிற
அந்த சீருடைகளின்
கொலுத்த அதிகாரம்
எனது இனம்
முழுவதுமாய் பரவுகிறது.

நமது குழந்தைகளின்
முகங்களை குத்துமளவில்
நீண்டு கூர்மையாயிருந்தது.

நிறைக்கப்பட்ட துப்பாக்கிகளின்
களியாட்டம்
சிறிய சைக்கிளில் போகும்
சிறுமி மீதான குறியாயிருந்தது.

எல்லோருடைய முகங்களும்
சுருங்கியிருக்க
தீராத வலிகள்
எழுதப்பட்டிருந்தன.

மனித நேயமும் உரிமைகளும் பற்றி
பாடம் நடத்தப்படட்ட
வகுப்பறையின்
கூரைகளிலும் சுவர்களிலும்
கிழிந்த புன்னகையோடு
எலும்புக்கூடுகள் வரைந்து
நிறைக்கப்பட்டிருந்தன

புத்தகத்தின் நடுவில்
வைத்திருந்த எனது குரல்
சைக்கிளில் சென்ற
சிறுமியைப் போல
கரைந்து கிடக்கிறது.
------------------------------------------

Wednesday, December 19, 2007

பாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
டைந்த வானத்தின் கீழாக
நிலவு
தொங்கிக்கொண்டிருந்தது
நட்சத்திரங்கள்
பேரிரைச்சலோடு
புழுதியில் விழுந்து கிடந்தன.

கனவு நிரம்பிய
அழகிய வாழ்வில்
புழுக்கள் நெளிந்தன.

எனது காதலியின் முகம்
ஒடுங்கிக்கொண்டிருந்தது.

அச்சம் அவளின்
முகத்தில் கசிந்து
நாடி வழியாக
வழிந்து கொண்டிருந்தது.

எனது கைகள் சோர்ந்திருந்தன.

நாம் அணிந்திருந்த
மோதிரங்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரையத்தொடங்கின.

இருவருடைய மடிகளிலும்
மரணம் பிசுபிசுத்தது.

அவள் எனது கன்னங்களில்
அச்சம் பீறிடக் கண்டாள்
நான் அவள் உதடுகளில்
ஏக்கம் வழியக் கண்டேன்.

நமது கண்கள்
தத்தளிக்க வாழ்வு
அந்தரத்தின் துயரத்தில்
ஆடிக்கொண்டிருந்தது.

சிறிய துண்டு நிலத்தில்
கசங்கிய துணி விரிக்கப்பட்டிருந்தது.

பாம்பு விழுங்கிய
நிலத்தின் மீதியில்
நமது சொற்கள்
உயிரற்றுக்கிடக்க
உரையாடல்கள்
மடிந்துகிடந்ததன.

எனது முகம் சுருங்கிக்கொண்டிருந்தது.

நமக்காய் சிரட்டையில்
எடுத்து வைத்திருந்த
கஞ்சியில்
ஒரு துண்டு செல்
வந்து விழுகிறது.

நமது உடல்களில்
விசம் பரவ
துண்டு நிலமும் சிதைகிறது.
-------------------------------------

ஒற்றைகையின் குறிப்பு

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
னது முகத்தை
நான் பறிகொடுத்துவிட்டேன்
பதுங்குகுழியின்
அழுகையின் ஓரத்தில்
உனது புன்னகை
எறிந்து கிடக்கிறது.

பதுங்கு குழிக்காக
எல்லோரும்
நிலத்தை அளவெடுக்கிறார்கள்
அதன் இன்றைய
பொய்மையில்
உனது தோற்றம்
சிதறி கிடக்கிறது.

உனக்கு ஒரு விமானம்
உனது தம்பிக்கு
ஒரு விமானம்
ஆளுக்கு நான்கு குண்டுகள்
மொத்தம்
இருபது குண்டுகளுக்கு
உனது குடும்பம்
பதிலளித்திருக்கிறது.

நீ ஒரு மாணவனாக
இருக்கலாம்
உன்னோடு
உனது வெள்ளைச்சீருடை
புத்தகங்கள்
பேனாக்கள் மீதெல்லாம்
உனது இன அடையாளத்தின்
அடிப்படையிலேயே
குண்டு வீசப்படும்.

தேசிய பாதுகாப்பு
என்கின்ற அட்டவணையின்
வரிசையில் இன்று
நீஇ உனது குடும்பம்
தெரிவுசெய்யப்பட்டு
அழிக்கப்பட்டிருக்கிறது.

இனி நீ அணிந்திருந்த
வெள்ளை சீருடையும்
வைத்திருந்த புத்தகங்களும்
மறைக்கப்பட்டு
ஆயுதம் தரித்திருந்தவனாகவே
கருதப்படுவாய்
உனது வீட்டினுள்ளிருந்து
அவர்களின் தேசிய பாதுகாப்பை
அச்சுறுத்தும்படி
நடமாடியவனாகவே
பார்க்கப்படுவாய்.

உனது அப்பாவித்தனமான
குருதியை திருகி
குடித்து
ஏப்பமிடுகிறது
அதிகாரம் தங்கிய
ஜனநாயகம்.
-----------------------------------------

01.11.2006 அன்று என் வீட்டிற்கு அருகில்
இலங்கை அரச விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பின் புறமாக
இடம்பெற்ற இந்தத்தாக்குதலில்
எனது கல்லூரியைச்சேர்ந்த(கிளிநொச்சி।மத்திய கல்லூரி) மாணவரான ச.கிருசாந்தன் பலியாக்கப்பட்டிருப்பதை இந்தப்படத்தில் காணலாம். அவருன் அவரது சகோதரன் மாணவன் ச.சசிக்குமார் உட்பட வீட்டார் ஜந்து போர் கொல்லப்பட அவர்களின் வீடு காணி என்பனவுடன் குடும்பம் தரைமட்டமாய் அழிந்தன.
விடுதலைப்புலிகளின் இலக்குகள் தாக்கியழிக்கப்பட்டதாகவும் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் எனவும் இராணுவப்பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத்சமரசிங்க கூறுகிறார்.
------------------------------------------------------------------------------------------

பேய்கள்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------


முகாரி ராகம்
கேட்கிறது..

இங்கே
மாமிச பிண்டங்களின்மீது
நடந்து கொண்டு
அவைகள்.....
எங்கும் இரத்த
ஆறு பாய்கிறது
எங்கள் உடலங்கள்
சிதைந்து
விதைந்து கிடக்கின்றன.

எஞ்சிய உயிர்கள்
போகுமிடம்
அறியாது
பொதிகளை சுமந்தபடி
போகின்றன
நிர்வாணமாய்
துடிக்கிறது நெஞ்சம்.
பருந்துகள்
இதைப்பார்த்து
வருந்தவில்லை
மாறாக அருந்துகிறது
எங்கள் சடலங்களை
எங்கள் துயரங்களை
எங்கள்
முகாரி ராகத்திற்கு
அவைகள் முகமகிழ்ந்து
கூத்தாடுகிறது.

எங்கள் துயரங்களை
மாலையாகப்
போட்டுக்கொண்டு
எங்கள் மரணங்களை
சலங்கையாக
கட்டிக்கொண்டு

அந்தப்பேய்கள்.
---------------------------------------------------------------------------------------

இந்தக் கவிதை 2004ஆம் ஆண்டு நான் முதலில் எழுதிய கவிதை ஆனால். 2005இல்தான் இது என் ஒருசில கவிதைகளுக்கு பிறகு பிரசுரமானது..

------------------------------------------------------------------------------

பூனையும்நாயும் நிரம்பியவீடு

கவிதை___________________________
--------------------------
தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
என் சப்பாட்டிற்குஅருகில்
என்பூனை காவலிருக்கிறது
சாப்பாட்டின் மிகுந்தவாசனையில்
உடைகள் வேகமாக கழறுகின்றன.

வீட்டிற்கு வெளியே இப்பொழுதெல்லாம்
மனிதர்களை சந்திக்கமுடிவதில்லை
நடமாடித்திரிபவர்களிடம்
உண்மை முகங்கள்
மருங்கியிருக்கின்றன
வீடு வரும்பொழுதெல்லாம்
அந்த மனிதர்களின்
பொய்முகங்கள் பின்தொடர்ந்து
துன்புறுத்துகின்றன.

பூனை கால்களை உரசும் பொழுதெல்லாம்
எல்லா வலிகளும் அகலுகின்றன
நிம்மதியை கெடுக்கிற
ஒலிகளின் மத்தியில்
பூனையின் குரல்
சங்கீதமாய் ஒலிபரப்பாகிறது.

எங்கள் வீட்டில்
பூனைக்கும் நாய்க்கும் கூட
நல்லநெருக்கம் இருக்கிறது
அவைகளின் தோற்றம் விகாரப்பட்டு
நெருக்கத்தின் வடிவமாய்
சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தன.
பூனையும் நாயும்
எப்பொழுதும் ஞாபகமாயிருக்கின்றன.

வீட்டில் நெருக்கமும் ஆறுதலும் பரவுகிறது
அமைதியும் ஒழுங்கும் நிலவுகிறது
பூனையும் நாயும் கூடிய எனதுவீடு
எப்பொழுதும்
எல்லாவற்றுக்குமாக காத்திருக்கிறது.
-----------------------------------------

Tuesday, December 11, 2007

இரவு மீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
தூரம் நீண்டிருக்கிறது

இரவுமீது ஒருசிவப்புப் பறவை
வந்து அமர்ந்திருக்கிறது
எனது உணவுத்தட்டில்
தண்ணீர் காய்ந்திருக்கிறது.

அம்மாவின்
சிரட்டையிலான அகப்பை
பாவனையற்று
பரணியில் வறண்டு கிடக்கிறது.

நூலகத்தோடு
முடிவடையும் வீதியில்
வெறும் சன்லைட்டுப் பைகள்
கிடக்கின்றன.

தொலைத்தொடர்பு கம்பிகளிற்குள்
அடையாள அட்டை
சொருகிய முகங்கள்
அழைப்பிற்க்காய் காத்திருக்கின்றன.

அம்மாவின் அழைப்பு
வந்து திரும்பிப் போகிறது.

மேலதிக விலையில்
வாங்கப்பட்ட
போனா அடிக்கடி
விழுந்து உறங்குகிறது
எழுத்துக்கள் சிறுத்து
பெருகிக்கொண்டிருக்கின்றன.

நடுங்கிக்கொண்டிருக்கும்
கை விரல்களின்
நகங்களின் நிறம்
வெளுக்கிறது.

மேசையில் குவிந்திருக்கும்
புத்தகங்களிற்கிடையில்
மிகத்தாமதமாக
கிடைக்கப்பெற்ற
தங்கையின் கடிதம்
மீண்டும் வாசிக்க கிடக்கிறது.

இன்றோடு தீரும்
சிறிய துண்டு
மெழுகு வர்த்தியின்
சுவாலையின் கடைசித்துளி மீதில்
ஒரு வெள்ளைவான்
ஒளிந்திருக்கிறது.
-----------------------------------------------------------

Monday, December 10, 2007

மாடு சூரியனை மேய்ந்து விட்டுப்போகிறது

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

ல்லா வார்த்தைகளும்
தகர்ந்து விட்டன
மிக வேகமாக வீசியெறியப்பட்ட
அந்தக் குரூரக்கல்லில்
நமக்காயிருந்த
வார்த்தையின் கடைசிமலர்
உடைந்து கிடக்கிறது.

மிஞ்சியிருந்த சொற்களின்
வாசனையும்
குளிர்மையும்
நெருப்பாய் தகிக்கிறது.

எல்லோரும்
சேர்ந்து வெளியிட்ட
மிகப்பெரிய புன்னகை
ஒரு சூரியனில் பிறந்து
அதுவாய் விளங்கியது.

அதன் நிறம்
சிதறடிக்கப்பட்டிருக்கிறது
கீற்றுக்கள்
பிய்க்கப்பட்டுள்ளன.

எல்லாக் கைகளின் முன்பும்
மலராய்க்கிடந்தது.

நமது குரல்களின்
எல்லா வார்த்தைகளாயும்
சிறகுகளாயும்
விரிந்து பறந்தன.

பூந்தோட்டத்தில் வைத்தே
நமது மலர்
சாகடிக்கப்பட்டது
ஒரு அதிகாலையிலேயே
நமது சூரியன்
கிழித்துப் போடப்பட்டது.

கிணறு வற்றி
வெறுமையாய்க் கிடக்கிறது.

நிறம் மாறிய புன்னகைகளும்
ஒலியின் முனைப்புகளுமற்ற
வார்த்தைகளும்
நமது வேலியில்
சிக்குப்பட்டுக் கிடக்கிறது.

வேலியில் அமர்ந்து காத்திருந்த
பறவையின் முகத்தில்
இப்பொழுது
மாடு ஒட்டப்பட்டிருக்கிறது.

கிணற்று வாழியில்
தண்ணீர் குடித்த மாடு
மலரை சிதைத்துவிட்டு
சூரியனை மேய்ந்து கொண்டு
வெள்ளையாய்ப் போகிறது.
----------------------------------------------

Sunday, December 9, 2007

இந்த நாகரிகத்தின் வேர் படுகிறது

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

01
ங்களில் யாருக்கும்
இங்கு வாழ்க்கையில்லை
படையெடுத்து வந்தவர்களின்
வாழ்வுக்குள் நசியக்கூடிய
சிறிய வாழ்க்கை ஒன்றை
ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம்.

இனி யாருடைய ஆதிகளும்
இங்கிருப்பதாய்
மார்பு நிமித்த முடியாது
இப்பொழுது
நிமிர்ந்த மார்புகள்தான்
சரிக்கப்பட்டிருக்கின்றன
இந்தக்குறியில்
எப்படி நாங்கள்
நமது மார்புகளை
நிமித்தப்போகிறோம்?

நாம் எல்லோரும்
குனிந்து கொண்டுதானே
போகிறோம்.

02
எங்கள் நாகரிக்தின்
வேர் படுகிறது
இந்த நகரத்தை விட்டு
ஒவ்வொருவராக
வெளியேறி வருகிறார்கள்
இது கைவிடப்பட்ட
நகரமாகிறது
துண்டிக்கப்பட்ட
தனிமையிலிருக்கிறது.

ஆதியை துறந்தவர்களாய்
வெளுறிய வீதிகளிலிருந்து
கால்களைத் தூக்கி
படகுகளில் நிரப்பி
மடக்கிக்கொள்கிறார்கள்.

இந்த நகரத்தை
யாருக்காக விட்டுச்செல்கிறோம்?
இங்கு யாருடைய வாழ்வு
சாத்தியப்பட்டடிருக்கிறது?

03
நாங்கள் ஒரு சங்கில்லியன் சிலை
வளர்த்திருக்கிறோம்
இப்பொழுது
சங்கிலியனின் சிலையை
எங்களால் நிமிர்ந்து
பார்க்க முடியாதிருக்கிறது
அது சிதைக்கப்பட்டிருக்கலாம் என்ற
ஜயத்துடன்
கண்களை வேலியின் கீழாக
சொருகிப்போகிறோம்
எங்கள் முன்னவர்களின்
நடுகல்கள்,நினைவுத்தூபிகள்
சில இரவுகளில்
அகழ்ந்து மண்ணாய் கிடக்கிறது
எங்களின் மம்மிகள்
இல்லை என்றாகின்றன.

இனி இந்த சுவர்களுக்ககு
வண்ணம் பூசவியலாது
அதில் பாசி படர்ந்திருக்கிறது
எங்கள் வாசகங்கள்
மறைக்கப்பட்டுவிட்டன.
எங்கள் சுவர்களின் ஆணிகள்
துருப்பிடித்து உக்கிவிட்டன.

எங்கள் நாகரிகத்தின் சுவடுகளை
சுவர்களில்
தொங்கவிடமுடியாது.

சிறைச்சாலை வண்ணம் பூசப்பட்டிருக்கிறது
அரச சிறைச்சாலை
அடைக்கலம் புகுவதற்கும்
அகதிகளாக்குவதற்கும்
தரப்பட்டிருக்கிறது
நாங்கள் நடமாட முடியாது
உயிரைப்பொத்தி வைத்திருக்கலாம்
கால்களில்
கட்டுப்போடப்பட்டிருக்கும்.

04
துப்பாக்கிகளால்
தவரவிடப்பட்டவர்களாயிருந்தாலும்
எதுவரை வாழப்போகிறோம்
எப்படி இங்கு ஒரு சந்ததி
உருவாகப்போகிறது?
நீ சந்ததியை உருவாக்க
திறனற்றவனாக்கி
விடுவிக்கப்பட்டிருக்கிறாய்
இவளின் கருவிலிருக்கும்
குழந்தையின் ஆயுள்
எவ்வளவு நீளமானது?
குழந்தையைவிட
இவளின் கருவில்
என்ன நிறைந்திருக்கிறது?

நீ குழந்தைகளுக்காக
சுவர்களில் வரைந்நிருந்த
உனது நாகரிகத்தின்
வீரதீர காட்சிகள் அழிந்துவிடட்ன
மீண்டும் அதை உன்னால்
வரைய இயலுமா?
நமது நாகரிகத்தின்
நிறங்கள் உதிர்கையில்
உருவப்படுகையில்
வெளுறிய பிள்ளைகள்
காலம் பிசகிய
பள்ளிக்கு போகிறார்கள்.

05
நிறைய வீடுகள்
பூட்டடப்பட்டிருக்கின்றன
பாழடைந்து விட்டன
நிறையவீதிகள் சருகுகளால்
நிரம்பி உள்ளன
ஒன்றில் அவர்கள்
வெளியேறியிருப்பார்கள்
அல்லது
கொலைசெய்யப்பட்டிருப்பார்கள்
சில வீடுகள்
சோபையிழந்து புகைகின்றன
அங்கு அவர்கள்

ஊமைகளாக்கப்பட்டிருக்கலாம்
குருடர்களாக்கப்பட்டிருக்கலாம்.

இங்கு யாருடை விழிகள்
திறந்திருக்கின்றன?
இங்கு யாருடைய வாய்கள்
பேசுகின்றன?
இங்கு யாருடைய நடமாட்டங்கள்
நிகிழ்கின்றன?

எங்கள் வீதி என்ற
துணிச்சலுடன் போகிறோமா?
நாம் பிரதான வீதியில்
செல்ல அனுமதிக்கப்படுகிறோமா?
வைத்தியசாலைப்பயணத்ததிற்கு
ஒரு மூதாட்டி நெடு நேரமாய்
காத்திருக்கிறாள்
எல்லோரும் தடுக்கப்பட்டு
உள்வீதிகளில்
நிறுத்தப்பட்டிருக்கிறோம்
இவைகளில் நசுங்கி
சில பிள்ளைகள்
தாமதமாக பள்ளி போகிறார்கள்.

06
நமது நாகரிகத்தின்
வேர் படுகிறது
நமது நாகரிகத்தின்
வாழ்வு அழிந்துவிட்டது
என்பதை வெட்கத்துடன்
ஒப்புக்கொள்வோமா?

இந்தக்குடா இப்பொழுது
எதற்கு விரிந்திருக்கிறது?

படையெடுத்தவர்கள்
நிறைந்திருக்கிறார்கள்
அவர்களுக்கு கையாள
பயங்கர ஆயுதங்கள்
நிறைந்திருக்கின்றன
அவர்கள் மரணத்தை
நிறைத்திருக்கிறார்கள்.

இதற்குள்ளளாகவே அந்த
வாழ்வு தரப்பட்டிருக்கிறது
நிறம் உருவப்பட்ட
வாழ்வை ஏற்க
நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்
அல்லது அரச படகு இருக்கிறது
கால்களை மடக்கி
அதில் ஏறிப்போகலாம்?

நமது வாழ்வில் வழியும்
வெட்கத்தை துடையுங்கள்
நாம் நமது மார்புகளை
எப்படி நிமித்த வேண்டும்?
இந் த நாகரிகத்தின் வேரை
எப்படி துளிர்க்கச் செய்யவேண்டும்?
நமது வர்ணங்கள் எங்கிருக்கின்றன?
நமதேயான வாழ்வை
மீட்டெடுக்க வேண்டும்..
---------------------------------------
யாழ்நகர்செல்படலம்2007

குட்டி மானின் புள்ளிகள்.


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

அந்த குட்டிமானை யாரோ
துரத்திக்கொண்டிருக்கிறான்
துரத்திக்கொண்டு வருபவன்
இராமனாக இருக்கலாம்
இரவணனாக இருக்கலாம்
மான்மீது
சீதையும் ஆசைப்பட்டிருக்கலாம்
சூர்ப்பனையும் ஆசைப்பட்டிருக்கலாம்.

குட்டிமானின் கண்களிள்
தவிப்பு பெரியளவில்
ஊறி சிந்திக்கொண்டிருந்தது.

அந்த மான் மாரீசனாக இருக்கலாம்
சூர்ப்பனையாக இருக்கலாம்
சீதையாக இருக்கலாம்.

இப்பொழுது மானாகவே தெரிகிறது
மானின் காலடியில்
பொறிகள் இருக்கலாம்
கால்சுவடுகளில் பொறிகள் முளைத்திருக்கலாம்.

மானே பொறியாக இருக்கலாம்.

கால்கள் இடருப்பட
கால்களை விரித்து ஒதுக்கி
மான் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது
மானகா மாறியவர்களும்
மானிற்கு ஆசைப்பட்டவர்களும்
அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

காடுகள் நீண்டு பரந்திருக்கின்றன.

இப்பொழுது
மானைப்போலவே
எல்லோருடைய கண்களிலும்
தவிப்பு பெரியளவில் சிந்துகிறது.