Sunday, April 27, 2008

சாபத்தின் நிழல்


எழுதியவர்_____________________________
--------------------------தீபச்செல்வன்

``````````````````````````````````````````````````````````````
குழந்தையின் சோற்றுக் கிண்ணத்தில்
நிரம்பியிருந்தது மரணம்
நிலவு
சாத்தானின் முகத்தோடிருந்தது
வானம்
தீராத சாபத்தின் நிழலில்
தோய்ந்திருந்தது.

கூர்மையான வாள்களாகியது கற்கள்
கூர்மையான கத்திகளாக
கூர்மையான துவக்குகளாக
மனிதர்களின் கைகளிற்குள்
நிரம்பியிருந்தன கற்கள்.

மனிதன் கற்களை தூக்கியது முதல்
விழுந்து கொண்டிருந்தது
இன்னொரு மனிதன்மீது.

கனிகளை புசித்தது முதல்
மனிதனுக்கு
ஆயிரம் முகங்கள்
ஆயிரம் கைகள்
ஆயிரம் கால்கள்
ஆயிரம் தலைகள்
முளைத்து நிறைந்தன.

கடவுள் முதல்
மனிதனிடம் தோற்றுப்போன வேளை
சாத்தானின் கை உயர்ந்த வேளை
சர்பத்தின்கதை தொடங்கிய பொழுது
சாத்தானின் கதை தொடங்கிய பொழுது
பாவமும் தொடங்கியது.

தெய்வங்களின் ஆயுதங்கள்
கோயில்களில் நிரம்பிக்கிடந்தன
அசுரர்களை அழித்த பாடல்களுடன்
பூஜை நடந்தது
பூக்களோடு
குருதியும் சதைகளும் படைக்கப்பட்டன.

மனிதனின் பரிணாமத்துடன்
கற்களும் வளர்ந்தன.

பசுக்களை திருடியபொழுது
தானியங்களை விதைத்த பொழுது
அவைகளுக்காய் போரிட்ட பொழுது
சாபத்தை விதைத்தான்
மரணத்தை அறுவடை செய்தான்
காயங்கள் குவிந்து கிடந்ததன.

மரணப்பூமியில் சாபக்குழந்தைகள் பிறந்தன
சாத்தானின் கதைகளுடன்
எறியப்பட்டுக்கொண்டிருக்கும்
கற் குவியல்களுக்கு இடையில்.
25.04.2008
``````````````````````````````````````````````````````

கமராப்போராளி




தீபச்செல்வன்



குழந்தைகள் பூக்களை நிரப்பி
உன்னை வணங்கிச் செல்கிறார்கள்
குருதி பிறண்ட கமராவோடு இருக்கிறது உனது அறை
சனங்கள் சனங்கள் பேசிய
எனது அன்புத்தோழனே

சனங்களின் கனவு நிரம்பிய உனது கல்லறைக்கு
ஒரு நாள் நான் வருவேன்.

சனங்களின் ஏக்கங்களை
அள்ளி நிரப்பி வரும்
உனது கமரா களத்தில் தோளிலிருந்து
உதிர்ந்து விழுந்ததை
நான் நம்பாமலிருக்கிறேன்.

சனங்கள் துரத்தப்பட்ட கிராமத்தில்
ஒரு துப்பாக்கியோடும்
உனதான கமராவோடும்
இன்னும் நீ சமராடிக்கொண்டிருக்கிறாய்.

நஞ்சு நிரப்பிய
உனது சயனைட் குப்பியில்
பதுங்குகுழிச்சனங்களின்
கண்ணீரையும் கோபத்தையும்கூட
நிரப்பிவைத்திருந்தாய்
அது ஒரு சூரியனாய்
உனது கழுத்தில் தொங்கியது.

உனது ஒரு சூரியனின் முகத்தையும்

உனது அறையில் நிரம்பியிருந்த
நமது வார்த்தைகளையும்
நான் எந்த களமுனையில் தேடுவேன்.

சீருடைகயையும்
துப்பாக்கியையும்
கமராவையும் இவைகளுடனான
உனது கடமையையும்
உனது அறையில் நான் தேடித்திரிகிறேன்
நாம் பருகிய தேனீர்க்கோப்பைகள்
அழுது கிடக்கின்றன.

நீ களப்பலியானாய்
என்ற செய்தியை சொல்லிவிட்டு
ஒரு பறவை துடிக்கிறது
கனவில் நிரம்பியுள்ள கல்லறைகளில்
எந்தக் கல்லறையில் நீ உறங்குகிறாய்?

உனது கமராவிற்குள்
இன்னும் அசைந்து கொண்டிருக்கின்றனர்
பதுங்குகுழிச்சனங்களின் அழுகை வார்த்தைகள்.


மன்னார் களமுனையில் 21 கார்த்திகை 2007 இலங்கை இராணுவத்தினருடனான சமரில் எனது அன்புத்தோழன் கமராப் போராளி மேஜர் அன்பழகன் களப்பலியாகினான்.

Thursday, April 3, 2008

மாதா வெளியேற மறுத்தாள்


எழுதியவர்_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------

சனங்கள் மாதாவையும்
குழந்தை யேசுவையும்
கூட்டிச் சென்றிருக்கலாம்.

யேசுவின் குருதியால்
எழுதப்பட்ட பைபிள்களை
கிளைமோரில் சிதறிய
மாணவர்களின்
குருதி பிறண்ட
வெள்ளைச் சீருடைகளில்
ஆயர்கள்
கட்டி எடுத்துப்போனார்கள்.

வத்திக்கான் எங்கேயிருக்கிறது.

பதுங்குகுழியில் மாதா ஒளிந்திருந்தாள்
வெளியில் போன அருட்சகோதரிகள்
குருதி பிறண்ட
திரு ஆடைகளோடு விழுந்தனர் பதுங்குகுழிக்குள்.

மடு மாதாவின் தேவாலயம்மீது
எண்ணிக்கையற்ற
எறிகனைகள் நுழைந்தன
குழந்தை யேசுவின் அழுகை
வீறிட்டு கேட்க
ஆயர்கள் வளாகத்தை எட்டிப்பார்த்தனர்.

சிலுவை பொறிக்கப்பட்ட
எறிகனைகளும்
பிறை பொறிக்கப்பட்ட்
எறிகனைகளும்
சூலம் பொறிக்பப்பட்ட
எறிகனைகளும்
புத்தரின் மூடிய கண்களில்
சுழறும் தர்மச்சக்கரத்திலிருக்கும்
படையினரிடமிருந்து
வந்து விழுந்து கொண்டிருந்தன.

வளாகத்தை விட்டு
வெளியை விமானம் உழுதடித்தபோது
சனங்கள் மாதாவை குழந்தையோடு
தனியே விட்டுச் சென்றனர்.

பாப்பரசர் வத்திக்கானில்
பைபிளை திறந்தபோது
குருதி ஒழுகியது
அமெரிக்காவின் முன்னால்
குருதி காயாத
சிலுவையோடு நின்றார் யேசு.

மிஷன் பாடசாலைகளுக்கு சென்ற
பிள்ளைகளையும்
சவப்பெட்டியில் கண்டோம்
வண்ணத்துப்பூச்சி திரிகிற
பற்றைகளில்
பதுங்கியிருந்தன கிளைமோர்கள்
வருகிற பிள்ளைகளை பார்த்தபடி
யேசுவை தூக்கிச் செல்ல மாதா அஞ்சினாள்.

பாப்பரசர் மன்றாடவில்லை
ஆயர்களும் அருட்சகோதரிகளும்
ஜெபத்தில் திடுக்கிட்டனர்.

சனங்களோடிருந்த மாதாவுக்கும்
குழந்தைக்கும் எதிராக
அரசுகள் யுத்தத்தை புரிந்தன
பைபிள்களாலும் ஜெபமாலைகளாலும்
பதுங்குகுழி நிரம்பியிருந்தது.

இனி இங்கிருக்கமுடியாது
என்று
ஆயர்களும் அருட்சகோதரிகளும்
மாதாவுக்கு எடுத்துக்கூறினர்
மாதா மறுத்தாள்
குழந்தை யேசுவின் அழுகையை துடைத்தபடி.

சனங்கள் விட்டுப்போன
மாதாவையும் குழந்தையையும்
ஆயர்களும் அருட்சகோதரிகளும்
கட்டாயப்படுத்தி
நேற்றோடு கூட்டிச்சென்றனர்
மடு தேவாலய வளாகத்தை விட்டு..
----------------------------------------------------------------------------


03.04.2008 அன்று மடு மாதா தேவாலய திருச்சொரூபம் ஆயர்களால் வளாகத்தை விட்டு தூக்கிச்செல்லப்பட்டது என்று ஆயர்கள் பி.பி.சிக்கு தெரிவித்தனர்.மடு மாதா தேவாலயப் பகுதியை கைப்பற்றுவதற்காக கடந்த ஒரு வருடமாக இலங்கை அரசாங்கத்தின் படைகள் கடும் போர் புரிந்து வருகின்றார்கள்.சகல இன மக்களும் வணங்கும் மடு திருத்தல பகுதி பெரும் போர் பூமியாக காணப்படுகிறது. அப்பகுதி மீதான கடும் தாக்குதல்களால் ஏற்கனவே மக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் நேற்று மடுமாதாவின் திருச்சொரூபமும் அங்கிருந்து வெளியெறியது.

Tuesday, April 1, 2008

மிதந்து திரியும் திறப்புகள்

கவிதை_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------

சில சைக்கிள்களின்
கண்டிலை
கழற்றி எடுத்தார்கள்
சில சைக்கிள்களின்
சீற்றை
கழற்றி எடுத்தார்கள்
சில சைக்கிள்களின்
கரியலை
கழற்றி எடுத்தார்கள்.

சைக்கிள்களின் சொந்தக்காரர்கள்
திரும்புவார்கள் என்ற நம்பிக்கை
யாரிடமுமில்லை.

சில பேர் சைக்கிளையே
திருடிக்கொண்டு போனார்கள்.

அலுமாரிகளை உடைத்து
புதையலை கண்டெடுப்பதுபோல
எனது தோழர்கள்
மகிழ்கிறார்கள்
அவர்களின் வாசனை செண்டுகளும்
பவுடரும்
சீப்புகளும் இன்னும்
வாசனையுடனிருந்தன.

உடுப்புகளை கிழறி
அறையில் எறிந்து விட்டனர்
சிலர் அந்த உடுப்புகளால்
அறையின் தூசியை
தட்டிக்கொண்டார்கள்
கடைசியில்
குப்பைத்தொட்டியில்
நிரம்பியிருந்தன அந்த உடைகள்.

அடிப்பகுதி கழன்ற சப்பாத்துக்களும்
உருக்குலைந்த செருப்புகளும்
அறையை விட்டு
ஒதுங்கியபடியிருந்தது.

பாடக்குறிப்புகள் கிழிந்தும்
உருக்குலைந்தும்
அள்ளி வீசப்பட்டும்
காற்றோடும்
கால்ளோடும் மிதிபட்டும்
குப்பையாகி கரைந்தன.

அவர்கள் எழுதிய
பாடக்குறிப்புகளும்
சேகரித்த
பத்திரிகை பகுதிகளும்
அடிமட்டங்களும்
மை இறுகிய பேனாக்களும்
சிப்புகள் அறுந்த
ப்பாக்குகளை விட்டு
தூரக்கிடக்க
அலுமாரிகளை விட்டு
தூரக்கிடந்தன
அந்த தூசி படிந்த ப்பாக்குகள்.

அறைகளின் மூலைகள்
பக்கங்கள்
எங்கும் கிடந்து உருண்டன
அவர்களிடமிருந்து
உதிர்ந்த முடிகள்
தலையணைகள்
வேலி ஓரமாய் எறிந்து கிடந்தன.

குளியலறை தட்டுகளில்
கிடந்தன
ஈரம் உலராத சவர்க்காரங்கள்
மலஅறையில்
வெண்கட்டியால் எழுதப்பட்ட
தூஷனங்கள்
தண்ணீரால் கழுவி
அழிக்கப்பட்டிருந்தது.

முகம் அழியாத கண்ணாடியுடன்
பெயரும் ஊரும் வகுப்பும்
எழுதப்பட்ட சுவர்களுக்கு
வெளுறிய வண்ணம் பூசப்பட்டிருந்தது.

அவர்களின் பொருட்களில் ஏக்கம் வழிகிறது
பெரும் ஆறாய்
யாரும் கண்டுகொள்ளாத
கரைகளை எடுத்து உடைத்தபடி..

அவர்கள் புதிய சைக்கிள்களோடும்
புதிய ப்பாக்குகளோடும்
திரும்பி வருவார்கள்
என்ற நம்பிக்கை யாருக்குமில்லை.

சிதறுப்பட்டு கலைந்து
மிதக்கிற
அவர்களின் கனவின் ஏக்கங்களைப்போல
சைக்கிள்களினதும்
அறைகளினதும்
துருப்பிடித்த திறப்புகள்
எங்கும் அலைந்து
மிதந்து கொண்டிருந்தன..
01.04.2008
--------------------------------------------------------------