Monday, December 29, 2008

கறுப்புத் துணி மூடுகிற நகரம்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________

பழாய்ப்போன சனங்களுக்கு எதிராகவும்
முகம் சுழிக்க வேண்டியிருக்கிறது.
சனங்கள் என்ன செய்ய முடியும்?

முதுகுகள் எங்கும்
துவக்குகள் குத்தயபடியிருக்கின்றன.
விலக்க முடியாத பேரணியில்
சொல்லித்தரப்பட்ட வாசகங்கள்
முழுவதுமாய்
நமக்கு எதிராய்
நமது வாயில் ஒலிக்கின்றன.

திணிக்கப்பட்டிருக்கிற கொடியின்
பற்களுக்கிடையில்
சிக்கித்தவிக்கிற தேசத்தின் வெற்றிக்கு
நமது சகோதரர்களாலே
பரணியெழுதப்படுகிறது.
சனங்கள் தமது சனங்களுக்கு
எதிராய் கிளப்பப்படுகின்றனர்.

துப்பாக்கி எல்லாவற்றையும்
ஆண்டு கொண்டிருக்கிறது
அதிகாரம் எல்லாவற்றையும்
மாற்றி அமைக்கிறது.

ஒடுங்குகிற சனங்களின்
வார்த்தைகள் நசுக்கப்படுவதற்கு
சனங்களையே திரட்டப்படுகிற நகரத்தில்
எதிரியின் அதிகார மொழிப்பாடல்
காதை கிழித்தொலிக்கிறது.

நாம் பாடலின் அர்த்தத்தை
புரியாதவர்களாயிருக்கிறோம்.
கறுப்புத்துணிகளால்
மூடுண்டு வாழுகிற நகரத்தின்
தலைகள் ஆடுகிறபோது
துப்பாக்கிகளே பேசுகின்றன.

சொற்களற்ற நகரத்தில்
மனிதர்கள் துண்டிக்கப்பட்டு
திரட்டப்படுகின்றனர்.

பழாய்ப்போன சனங்களின்
கையில் திணிப்பதையெல்லாம்
பார்வையிடுவதற்கு முன்பே
படம் பிடிக்கப்படுகின்றனர்.
எல்லோருடைய கால்களும் உருகுகிறது.

கறுப்புத்துணி தலைகளை தின்று விடுகிறது.
முண்டங்கள் திரியும் வீதியில்
அடிமைக்கு வலுவான
வாசங்கள் தொங்குகின்றன.

அதிகாரம் தனது வெற்றியை
திணித்துவிட்டு
அடிமையை கட்டாயம் செய்து தருகிறது.
வீதியை கடக்கிற அவகாசத்தில்
விடுதலை மறக்கிறது
நாடு மறக்கிறது
கறுத்த நகரத்தின் சந்தையுடன்
வாழ்வு முடிகிறது.

நமது கண்களை நாமே
பிடுங்குவதைப்போலவும்,
நமது உடலை நாமே
கூறிடுவதைப்போலவும்
அதிகாரம் எல்லாவற்றையும்
எல்லாரையும் பிரித்தாழுகிறது.
பாம்புகள் வழிகாட்டுகிற வீதியில்
தொன்மையான சொற்கள் பலியிடப்பட
முகங்களை குத்துகிற வாசங்கள்
எழுதித்தரப்பட்டிருக்கின்றன.

எனது பாழாய்போன சனங்களே
துவக்குள் சுட முடியாத
என்றைக்குமான எல்லாவற்றுக்குமான மனது
விலக்க முடியாத பேரணியில்
மிதிபடுவதை கண்டு செல்லுங்கள்.

கடைசியில் உணவில் விஷமிருக்கிறது
படுக்கை சுடலையாகிறது.
எழுதித்தரப்பட்ட வாசங்கள்
தூக்கத்தில் கொலை செய்துவிட்டு போகிறது.

பழாய்ப்போன சனங்களுக்கு எதிராகவும்
முகம் சுழிக்க வேண்டியிருக்கிறது.
அதிகாரம் எல்லாவற்றையும்
தனக்கு ஏற்றமாதிரி மாற்றியமைக்கிறது.
சனங்கள் என்ன செய்ய முடியும்?
--------------------------------------------------------------------
28.12.2008. யாழ்ப்பாணத்தில் மக்கள் சிலர்
இலங்கை அரசின் வன்னி இராணுவ நடவடிக்கைகு ஆதரவாக பேரணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Friday, December 26, 2008

என்னைத் தொடருகிற மேலுமொரு இரவு

-------------------------------------------------
தீபச்செல்வன்
___________________________________

குற்றம் சாட்டப்பட்டிருக்கிற இரவு
என்னை வெளியில் விடுகிறது.
பாதியில் திரும்பி விடுகிற தெருவில்
என்னை யாரோ தேடிவர
குறையில் கீழே போட்டு நசித்த
சிகரட்டை மீட்டுச் செல்கிறார்கள்.

பயங்கரம் மிகுந்த இரவில்
நான் போர்த்தியிருக்கிற
போர்வையின் வெளியில்
யாரோ உலவித்திரிகிறார்கள்.

அறைக்கு மேலாய் பறக்கிற
ஹெலிகாப்டர்
கனவில் புகுந்து
ஒரு குடியிருப்பை தாக்குகிறது
தூக்கம் போராகிவிட
பகலை துவக்கு தேடித்திரிகிறது.

தடைசெய்யப்பட்ட சொற்களை
எழுத தொடங்கிய மேசையில் அதனுடன்
பேனையும் தாளும்
என்னை விட்டு விலகுகிறது.

இரவு ஒரு முகமூடியை அணிந்து
மிரட்ட அதனிடையில்
கறுத்தத் துணியால் மூடிய மோட்டார் சைக்கிள்கள்;
சுற்றிக் கொண்டிருக்கின்றன.
தெருக்கள் சுருங்கிப்போயின.
குறைச் சிகரட்டோடு வருகிற
கடித்தில் சவப்பெட்டி வரையப்பட்டிருந்தது
புத்தக மேசை கடலில் குதித்துவிடுகிறது
மரணம் பற்றி வழங்கப்பட்ட
தீர்வை குறித்து
என்னால் எதையும் கூறமுடியவில்லை.

கதவு பயத்துடனிருந்தது
பயம் விளைவித்த சொற்களை
துவக்கு பயமுறுத்தியது.
சொற்களால் எல்லாவற்றையும்
கடக்க முடிகிறது.

இலக்கங்கள் அச்சுறுத்துகிற
தொலைபேசியில்
நான் தொடர்ந்து பேசுகிறேன்.
துவக்கின் அதிகாரம் சிரிக்கிற சத்தத்தில்
வழமையாக
விலகிச் செல்கிற தெருவில்
தவறவிடப்பட்டவனைப் போலிருக்க
இந்தக் சொற்களுடன்
மேலுமொரு பகல் முடிந்து போகிறது.

தெருவில் சொற்கள் தனித்திருக்கின்றன
இறந்த பகலை மேலுமொரு இரவு தொடருகிறது
-------------------------------------------------------------------------
நன்றி: விழிப்புணர்வு


Monday, December 1, 2008

வற்றாத காலையில் வருகிற அச்சுறுத்தல்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________
01.
பேய் ஓட்டிவருகிற
மோட்டார் சைக்கிள் என்னை மோதுவதை
முதலில் கனவில் கண்டேன்.

தூக்கம் குழம்பிய காலையில்
துப்பாக்கியால்
எழுதப்பட்ட சுவரொட்டி
அறையின் கதவினை
தட்டிக்கொண்டிருந்தது.

அச்சுறுத்தல் பட்ட காலையில்
தேனீரில் குருதி கலந்திருக்க
குளியலறையில்
பேய்கள் விலகிச் செல்கின்றன.

பெயர் குறிப்பிடப்பட்ட
பதினான்கு பேரும்
செல்லுகிற தெருவில்
நிறையப்பேர்களிடையில்
தனிமை எதிர் வந்தது
எல்லோரையும் தேடி
துவக்கு வெறி பிடித்தலைகிறது.

யாரும் பக்கத்தில்லாத நேரத்தில்
பின்னால் ஒருவன்
நின்று கரைய
முன்னால் நிறையப்பேர்
குதிக்கிறார்கள்
கண்கள் பெருத்தலைகின்றன.

தெரு குறித்து நிறைய
ஆசையிருக்கிறது
சுருங்கிய பகலில்
கத்திகள் கூர்மையுடன்
பசித்திருக்கிற கரைகளிலிருந்து
சைக்கிள் வெட்டுப்படுகின்றன.

பேய்கள் ஒட்டுகிற
மோட்டார் சைக்கிள் என்னை
பின் தொடருகிற
மாலைக்கும் இரவுக்கும்
இடையில்
நான் மறுநாட் கலையை இழந்தேன்.

இன்று அச்சுறுத்தப்பட்ட காலையாகி
இருளத்தொடங்கியது.

தூக்கம் கலைத்து
கொலை செய்த சுவரொட்டி
என்னை தின்றபடி
நகரமெங்கும் திரிகிறது.
---------0---------------------------0-------------------------------------------

02.
உன்னையும் தங்கச்சியையும்
எல்லாவற்றையும்
உருவி எடுத்த வெள்ளம்
அதே காலையில் என்னையும்
மூழ்கடிக்க காத்திருந்தது.

நெத்தலி ஆறு தருமபுரம் ஆறாகி
உனது தடிகளான வீட்டை
பறித்துச் செல்கிறது.

எல்லோருடைய கண்ணீரும் குருதியும்
கரைந்து கொண்டிருக்கிற
கனவுகள்
ஆறுகளை மீறி எழுந்தன.

நீ வெள்ளத்தின் துயரங்களை
கூறிக்கொண்டே இருக்கிறாய்.
என்னை விழுங்க காத்திருக்கிற
வெள்ளம் குறித்து நான் எதைப்பேசுவது?

அகதிகளை மேலும் அகதிகளாக்கும்
மழையில் நான் அலைந்தேன்
எனது நகரத் தெருவின் இடைகளில்
உன்னையும் தங்கச்சியையும்
கொட்டும் அடைமழையில் கண்டேன்.

பெருமழையில் மோதுகிற
போராளிகள் உன்னை மீட்க
வெள்ளத்தினிடையில்
எனது முகம் கண்டாய்
உனது கண்ணீரும் அழுகையும்
வெள்ளமாகி
படிகளால் ஏறி
எனது அறையில் நுழைந்தது.

போர் அலைக்கிற தெருவில்
பெய்த மழையும் சூழ்ந்த வெள்ளமும்
உன்னை அச்சுறுத்த
'இறுதி' என மிரட்டுகிற
மரணப் பட்டியலில் நான் தெரிவு செய்யப்பட்டிருப்பதை
எப்படி நான் உன்னிடம் சொல்லுவேன்?

நமக்கிடையில்
வற்றாத வெள்ளம் அடித்துப்பாந்து சூழந்திருக்க
பெருமழை தொடர்ந்து பெய்கிறது
அடிமைப்படுத்த முனைகிற
அதிகாரம் மற்றும் அதன் வியூகங்கள் போல.
-------0----------------------0-------------------------------------------------
24.11.2008 "இறுதி எச்சரிக்கை" என்கிறது மரண அச்சுறுத்தல் நோட்டீஸ்