Monday, September 22, 2008

ஜெபங்களின் மீதெழுகிற அழுகை


-----------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________

ஜெபங்களின் மீது அழுகை எழுகிறது
ஜெபமாலைகளின் பேரணியில்
பைபிள்களை வாசித்தபடி
திருப்பாடல்களை பாடுகையில்
கொலைசெய்யப்பட்ட பறவைகள் வந்து போயின.

தேவாலயங்களைவிட்டு
வெளியில் வருகிறபோது
சிலுவையை சுமந்து திரிகிறதாய்
கடவுள் சொல்லுகிறார்.

வீட்டுக்கும்
தேவாலயத்திற்கும் இடையில்
பாடாய்
கிடக்கின்றன சிலுவைகள்.

ஆணிகள் அறையப்பட்ட
மனிதர்களின்
முகங்களில் வழிகிறது கடவுளின் இரத்தம்.

சபிக்கப்பட்ட வாழ்விலிருந்து
மீளுவதற்காய் ஜெபித்தீர்கள்
அழகிய தோட்டம் பற்றி கனவுடன்
அழைத்து வரப்பட்ட குழந்தைகள்
ஆலயத்தை சூழ
விளையாட ஏங்குகிறார்கள்

இந்த அழுகை வழியும்
ஜெபங்களில் சாத்தானுக்கு எதிராய்
சிலுவையுடன் செல்வதை நான் கண்டேன்.
------------------------------------------
21.09.2008
---------------------------------------

திருவிழாவில் மண்சுவரில் மோதுண்ட குழந்தை


----------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________

காணாமல்ப்போன குழந்தை
கடவுளை விளையாட கேட்டிருந்தது.

பொம்மைகள் தொங்கும்
திருவிழாவில்
நமது மணல்த்தரை சேறாகிக்கிடக்கிறது.

முட்கள் முளைத்திருக்க
புதைந்து கொண்டு வருகிறது தேர்.
இரத்தம் வடியும் கால்கள்
தீ மிதிக்கின்றன.

தேர்களில் இருள் நிரம்பிக்கிடக்க
பூக்கள் கருகியிருந்தன
வடத்தின் நீளம் சுருங்கி
ஏதோ ஒரு சுவரில் மோதி அறுகிறது.

கால்களுக்குள் ஒளி புதைகிறது

கடவுளின் தலையை காணாதபோதும்
காய்ந்த தலைகளின்மீது
கைகள் கூப்பியிருந்தன.

மணற்சுவர்களிற்கிடையில்
நடக்கும் திருவிழாவில்
காணாமல்ப்போன குழந்தையை
தேடித்திரிகிற மனைவியிடம்
கண்கள் இல்லாத பொம்மைகள் இருந்தன.

சுற்றிச்சுற்றி மணற்சுவர்களுக்கிடையில்
குனிந்தபடி இழுக்கும்
எல்லா தேர்களிலும் இருந்த கடவுள்களின்
கண்களிலிருந்தும் இரத்தம் கசிந்தது.

நானும் அவளும்
முதன் முதலில் பார்த்துப்பேசிய
மணல்த்தரையில்
காய்ந்து விடாத நமது முத்தத்துடன்
புதைந்து கிடந்தன
குழந்தையின் வளையல்கள்.

கடவுளை பொம்மை என்று
குழந்தை கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.
--------------------------------------------------------
20.09.2008
----------------------------------

Sunday, September 7, 2008

போர்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்

----------------------------------------------------------------

கவிதை:தீபச்செல்வன்
_______________________________


01
வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு
திரும்பிக்கொண்டிருந்த
அம்மாவை அக்கராயனில்
நான் தேடிக்கொண்டிருந்தேன்
ஷெல்களுக்குள்
அம்மா ஐயனார் கோயிலை
விழுந்து கும்பிட்டாள்
ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது.

நேற்று நடந்த கடும் சண்டையில்
சிதைந்த கிராமத்தில்
கிடந்தன படைகளின் உடல்கள்
கைப்பற்றப்பட்ட
படைகளின் உடல்களை
கணக்கிட்டு பார்த்தபடி
சிதைந்த உடல்கள்
கிடக்கும் மைதானத்தில்
பதுங்குகுழியிலிருந்து
வெளியில் வந்த
சனங்கள் நிறைகின்றனர்.

பக்கத்து வீட்டில்
போராளியின் மரணத்தில்
எழுகிற அழுகையுடன்
இன்றைக்கு நாலாவது தடவையாக
திடுக்கிட்டு எழும்பிய அம்மா
முறிகண்டி பிள்ளையாரை
கும்பபிட்டபடி ஓடுகிறாள்
பூக்களும் மண்ணும்
கைகளில் பெருகுகிறது.

02
போன கிழமை விட்டு வந்த
கிராமம் முழுவதுமாய் சிதைந்து போனது
குசினிக்குப் பக்கத்தில்
கிடந்த பதுங்குகுழியில்
படைகளின் ஏழு சடலங்கள்
மூடுண்டு கிடந்தன.

போராளிகள் கைப்பற்றிய
ஆயுதங்களில் மீட்கப்பட்டிருந்த
கிளைமோர்களைக் கண்டும்
எறிகனைகளைக்கண்டும்
சனங்கள் பெருமூச்செறிந்தனர்.

போர் வாழ்வை அழித்தபொழுது
கிராமங்கள் போர்க்களமாகின
அக்கராயன்குளம் காடுகளில்
ஒளிந்திருக்கும் படைகளிடம்
நாச்சிக்குடா வீதியே அகப்பட்டிருந்தது

03
அகதிகள் வீடாயிருந்த
ஸ்கந்தபுரம் இத்திமரம்மீது எறிகனைகள் வீழ்ந்தன
அகதிக்குடியிருப்புகள் நிறைந்த
மணியங்குளம் கிராமம்
எரிந்து சாம்பலாய்க் கிடந்தது.

நிலத்தில் பதுங்கமுடியாதபொழுது
வெளியில் வந்து விடுகிறேன்
தலைகளில் விழும் எறிகனைகளை
ஏந்தும் பிள்ளைகளை
நினைத்து துடிக்கிற
தாய்மார்கள் வெளியில் நின்றனர்.

செஞ்சிலுவைச்சங்கம்
கொண்டு வந்த போராளியின் உடல்
மேலும் குத்தி கிழிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் ஒரு சிங்களத்தாய்
துடித்தழுகிறாள்
ஈழத்தில் ஒரு தமிழ்த்தாய்
துடித்தழுகிறாள்
சிதைந்த கிராமங்களில்
பரவிக்கிடந்தன
படைகளின் உடல்கள்
மதவாச்சியை கடந்து
படைகள் வரத்தொடங்கியபொழுது
வவுனியாவைக்கடந்து
போராளிகள் போகத்தொடங்கினர்.

தெருமுறிகண்டி மடங்களில்
கிடந்தன ஆள் இல்லாதவர்களின் பயணப்பொதிகள்.

புதுமுறிப்பில் வீழ்ந்த
ஏறிகனைகளில் இறந்த
குழந்தைகள்
வரிச்சீருடைகளை அணிந்த
காட்சிகளை
ரூபவாஹினி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

படைகளை நோக்கி சுடுகிற
போராளிகளின் மனங்களில் இருந்தன
பசுமையான கிராமங்களும்
அங்கு நடமாடித்திரிகிற சனங்களும்.
--------------------------------------
04.09.2008
-----------------

Wednesday, September 3, 2008

முத்தமிடக் காத்திருந்த நாள்.


----------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
உன்னை முத்தமிடக் காத்திருந்த
நாளில்
என் கடைசிக் கவிதை
கொலை செய்யப்பட்டிருந்தது.

விஷர் பிடித்த
மோட்டார் சைக்கிள்
விழுங்கிய நகரத்தில்
எனது முகம்
தனியே தொங்குகிறது.

ஆட்களில்லாதவர்களின்
வார்த்தைகளை கொலுவிய
புத்தகக் கடையில்
புத்தகங்களினிடையில்
சொருகப்பட்டிருந்தது
ஒரு துப்பாக்கி.

ஆமணக்கம் விதைகளை
தின்று மயங்கிய
குழந்தைகள் திரும்பி
அழும் சத்தத்திற்கு அருகில்
கிடந்தன சவப்பெட்டிகள்.

உன் முத்தத்திற்கும்
என் கவிதைக்கும் இடையில்
ஒரு நூல் வளருகிறது.

அந்த நூலை அறுக்கிறது
என்னை அவர்களின்
குருதிச் சொற்களால்
எழுதிய சுவர்களிலிருந்து
திரும்புகிற துப்பாக்கி.

என் கடைசிக் கவிதையை
எழுதிய தாள்களினை மூடுகிறது
ஒரு இராணுவத் தொப்பி.

02
நான் உன் முத்தத்திற்காகவும்
பேனாக்களை எடுத்துச் செல்கிறேன்.

நாம் குழந்தைகள் நிறைந்த வீட்டில்
சோறு
சமைத்துக் கொண்டிருந்த பொழுது
படலை துண்டு துண்டாய்
சிதைந்து போனதை நீ கண்டாய்.

சிதைந்த நகரத்தில்
திறந்திருக்கும் தேனீர்க்கடைக்கு
உன்னை இன்னும் அழைத்துச் செல்லவில்லை
நான் இன்னும்
உன்னை முத்தமிட வேண்டும்
குழந்தைகள்
அழைத்து வரப்பட்ட நகரத்தில்.

மிகவும் பிரியத்துடன்
முத்தமிடக் காத்திருந்த நாளில்
குருதி கசிந்த கைகளினால் எழுதிய
கடைசிக் கவிதையினோடு
நான் கொலை செய்யப்பட்டிருந்தேன்.
-------------------------------------------