Wednesday, November 28, 2007

பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

வானம் இடிந்து விழுந்திருந்தது
பாட்டியின் முகத்தில்
பழைய கதைகள்
உறைந்திருக்க
புதிய உலகம் பற்றியகதை
தெரியத்தொடங்கியிருந்தது
குழந்தைகள் கதைக்காக
பாட்டியை சூழ்ந்தார்கள்.

பழைய கதைகளின்
ஐதீகமும் மர்மமும்
குழந்தைகளிடம் ஆர்வமற்றிருந்தது
ஐதீகமும் மர்மமுமுடைய
கனவுலகின் கதையில்
தீவிரம் அற்றுப்போயிருந்தது.
உலகம் வேறொன்றாக இருந்தது.
குழந்தைகள் பாட்டியிடம்
ஜதார்த்தமும்
நடைமுறைச்சாத்தியமுமுடைய
கதையை எதிர்பார்த்தார்கள்.

நிலவு கலவரத்தில்
சிக்கியிருந்தது
முற்றங்கள் பாதிக்கப்பட்டு
சுருங்கிக்கொண்டிருந்தன.
சதையும் குருதியுமுடைய
மண்டைஓடுகளின் மத்தியில்
குழந்தைகளின் விளையாட்டுவீடுகள்
குழம்பியிருந்தன.

பாட்டி புதிய உலகம்
பற்றிய கதையை
அளக்கத்தொடங்கினாள்.

மண்டை ஓடுகளின் குவியல்கள்
நிரம்பியிராத உலகம்
உருவாகப் போகிறது.
அங்கு மரங்கள்
கிழிந்திருக்கப்போவதில்லை
நிலவு கலவரமின்றியிருக்கும்
முற்றம் அச்சமின்றி
விரிந்திருக்கும்
காற்றில் மரணத்தின்
வாசனை இருக்காது.

சொற்களில் குருதியின்
வாசனை வீசப்போவதில்லை
பறவைகள் மீண்டும் தங்கள்
சங்கீதங்களை இசைக்கும்
தெருக்களில் சூழ்ச்சி இருக்காது
மரணங்கள் பற்றியும்
சவப்பெட்டிகள் பற்றியும்
நம்மில் யாரும் அறியாதிருப்போம்.
வானம் மனிதாபிமானத்தில்
வெளித்திருக்கும் விழிகள்
எந்தக் காயங்களுமின்றி திறந்திருக்கும்
மிகப் பசுமையானகாட்சிகளால்
அந்த உலகம் நிரம்பியிருக்கும்

ஜதார்த்தமுடைய கதையை
கூறியதாகப் பாட்டி
திருப்திப்பட்டாள்
பாட்டியின் இருப்பில்
நிம்மதியிருந்தது.
கதையில் நம்பகம் இருப்பதாக
குழந்தைகள் உணர்ந்தனர்.

குழந்தைகளின் விழிகளில்
அச்சம் நீங்கின
பாட்டியின் வார்த்தையின்
ஆர்வம் குழந்தைகளை
குதூகலிக்கச் செய்தது.

குழந்தைகளின் முகங்களில்
புதிய உலகம்
நிகழத்தொடங்கியது.
_________________________

No comments: