Tuesday, November 27, 2007

நீயும் நமதுகுழந்தைகளும்


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

னது பிள்ளைகளும்
அழுகிறார்கள்
உனது பிள்ளைகளும்
அழுகிறார்கள்
நமது குழந்தைகள்
நமது தோள்களின்
பயங்கர வெளிக்குள்
நித்திரையின்றி திரிகிறார்கள்.

முற்றங்களுக்காக எல்லைகளுக்காக
வெளிகளுக்காக
முகங்களை பகிர்வோம்

நாம் புன்னகைக்காலம்
எனக்கும் புன்னகை மீது
மொய்ப்பதே விருப்பம்
உனக்கும் கூட என்கிறாய்
நாம் நாமாக
புன்னைகக்க வேண்டும்
அதற்காக
முதலில் நமது முகங்களில்
வழியும் பயங்கரத்தை
துடைப்போம்

யார் முதலில்
பயங்கரத்தை துறப்பது என்பதில் கூட
நமக்குள் இழுபறியும் பிடியும்.
பயங்கரத்தின்
முரண்களுக்குள்
நமது குழந்தைகள்
புதைந்து போகிறார்கள்.

உனக்கும் எனக்குமான
வெளியின் பயங்கரத்தில் உலவும்
நமது குழந்தைகள்
முற்றங்களை குழப்பிவருகிறார்கள்.

இப்போது நமது
மௌனத்திலும் பயங்கரம்
பாய்ச்சி வழியவிடுகிறோம்.

குழம்பிய நித்திரையில்
நமது குழந்தைகள்
தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளார்கள்
அவர்கள் எழும்பியதும்
நாம் பதில் கூறவேண்டும்
அவர்கள்
நமது விரல்களைத்தான்
நோக்கப் போகிறார்கள்

அவர்களுக்காக நம்மிடம்
என்ன பதில் கிடக்கிறது?
பயங்கரத்தை தவிர
எதையும் குழப்பதேவையில்லை
பயங்கரத்தை கூட
பகிரத் தேவையில்லை
முற்றங்களை
விழுங்காமல் இருப்போம்

நமது குழந்தைகளின்
வீடுகள் சிதையாமலிருக்க வேண்டும்
பயங்கரமில்லாத
ஒரு முற்றம்
அவர்களுக்கு அவசியம்.
----------------------------------------------------------

No comments: