Friday, November 30, 2007

பதுங்குகுழியில் பிறந்தகுழந்தை

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
01
ருவேளை எனது குழந்தை
அமெரிக்காவில்
ஒரு மாளிகையில்
பிறந்திருந்தால்
எதை உணர்ந்திருக்கும.?

குழந்தைகளுக்கான
சிறிய சவப்பெட்டிகள்
நிறம்பிக் காணப்படும்
எதுவுமற்ற
நமது நகரத்தில் அல்லவா
பிறந்திருக்கிறது

02

குழந்தைகளின் புன்னகைகளை
நிலங்களின் அடியில்
புதைத்து வைத்துவிட்டு
நாம்
நசுங்கிய எதிர்காலத்தோடு
அமர்ந்திருக்கிறோம்

பதுங்குகுழியினுள்
அவர்களின் பள்ளிக்கூடங்கள்
தொலைந்துவிட்டன.
இசையின் நாதம்
செத்துவிட
குழந்தைகளின் பாடல்கள்
சாம்பலாகிப் பறக்கின்றன

மலர்கள்
தறிக்கப்பட்ட தேசத்தில்
இராணுவச் சப்பாத்துகளின்கீழ்
வாழ்வைத் தொலைத்துவிட்டு
இனத்தின் ஆதிப்புன்னகையை
அறியாது வளர்கிறார்கள.

நமது வாடிய முலைகளுடன்
மெலிந்த குழந்தைகளை பெற்று
புன்னகைப்பட்ட
நாடு செய்கிறோம்.
இந்தப் பதுங்கு குழியில்
கிடக்கும்
எனது குழந்தையின் தாலாட்டில்
நான் எதை வனைந்து பாடுவது?

03

தாய்மார்களின் வற்றிய
மடிகளின் ஆழத்தில்
குழந்தைகளின் கால்கள்
உடைந்துகிடக்க
பாதணிகள்
உக்கிக்கிடந்தன.

அவர்களின் உதடுகள்
உலர்ந்து கிடக்கின்றன
நாவுகள் வரண்டு
நீள மறுக்கின்றன
நாங்களும்
திறனியற்ற நாவால்
இந்தக் குழந்தைகள்
கருவூட்டப்பட்டிருக்கையில்
எதைப் பேசினோம்?

04

குழந்தைகளின் விழிகளில்
மரணம் நிரந்தரமாக
குடிவாழ்கிறது
அவர்களுடன் ஓட்டிப்பிறந்த
கருணை வார்த்தைகளும்
விடுதலைப் பாதங்களும்
அவர்கள் அறியாமல்
பறிக்கப்பட்டுள்ளன

எதையும் அறியது கிடக்கும்
எனது குழந்தை
சதாமின் ஆட்சிக் காலத்தில்
ஈராக்கில் பிறந்திருக்கலாம்

05

நான் கடும் யுத்தப்பேரழிவில்
பிறந்ததாய்
அம்மா சொன்னாள்
எனது குழந்தையை
நான் இந்;த பதுங்குகுழியில்
பிரசவித்திருக்கிறேன்

அது நாளை என்னிடம்
ஜனாதிபதியையும்
இராணுவத் தளபதிகளையும்
விசாரிக்கக்கூடும்
நான் நிறையவற்றை
சேமித்துவைக்க வேண்டும்.

கண்ணாடிகளை உடைத்து
தண்ணீரைக் கிறுக்கி
எங்களை நாங்கள்
காணாமல்
இருட்டில் வாழ்ந்தோம் என்றும்
அது பிறக்கையில்
எரிந்த தொட்டிலின்
தாழத்தில்
தாலாட்டுப் பாடல்கள்
கருத்திருந்தது என்றும்
நான் கூறவேண்டும்.

06

நான் மலட்டுத் தன்மை அடைவதற்கு
வேண்டியதற்காக
அப்பொழுது வெட்கப்பட வேண்டியிருக்கும்
ஏதாவது பேசுங்கள்
ஏதாவது செய்யுங்கள்
என்ற எனது உரையால்கள்
தலைகுனிந்து கிடக்கும்

07

பதுங்குகுழிக்குள்
எனது குழந்தையின் அழுகை
உறைந்துவிடுகிறது

08

ஏன் இது
ஒரு ஈழக்குழந்தையாக
இங்குவந்து பிறந்திருக்கிறது?
அதுவும் இந்தப் பதுங்குகுழியில்
கண்ணை விழித்திருக்கிறது?
எனது குழந்தையின் அழுகை
நாளை இந்நாட்டின்
தேசிய கீதமாய் மாறலாம்
---------------------------------------------------

1 comment:

Unknown said...

//மலர்கள்
தறிக்கப்பட்ட தேசத்தில்
இராணுவச் சப்பாத்துகளின்கீழ்
வாழ்வைத் தொலைத்துவிட்டு
இனத்தின் ஆதிப்புன்னகையை
அறியாது வளர்கிறார்கள.//

//குழந்தைகளின் விழிகளில்
மரணம் நிரந்தரமாக
குடிவாழ்கிறது
அவர்களுடன் ஓட்டிப்பிறந்த
கருணை வார்த்தைகளும்
விடுதலைப் பாதங்களும்
அவர்கள் அறியாமல்
பறிக்கப்பட்டுள்ளன//

அர்த்தங்கள் ஆழப்படுகின்றன குழந்தைகளுக்கு மட்டுமா...... வலிகள்..... வலிகள்....வலிகள்


சத்யன்