Wednesday, September 3, 2008

முத்தமிடக் காத்திருந்த நாள்.


----------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
உன்னை முத்தமிடக் காத்திருந்த
நாளில்
என் கடைசிக் கவிதை
கொலை செய்யப்பட்டிருந்தது.

விஷர் பிடித்த
மோட்டார் சைக்கிள்
விழுங்கிய நகரத்தில்
எனது முகம்
தனியே தொங்குகிறது.

ஆட்களில்லாதவர்களின்
வார்த்தைகளை கொலுவிய
புத்தகக் கடையில்
புத்தகங்களினிடையில்
சொருகப்பட்டிருந்தது
ஒரு துப்பாக்கி.

ஆமணக்கம் விதைகளை
தின்று மயங்கிய
குழந்தைகள் திரும்பி
அழும் சத்தத்திற்கு அருகில்
கிடந்தன சவப்பெட்டிகள்.

உன் முத்தத்திற்கும்
என் கவிதைக்கும் இடையில்
ஒரு நூல் வளருகிறது.

அந்த நூலை அறுக்கிறது
என்னை அவர்களின்
குருதிச் சொற்களால்
எழுதிய சுவர்களிலிருந்து
திரும்புகிற துப்பாக்கி.

என் கடைசிக் கவிதையை
எழுதிய தாள்களினை மூடுகிறது
ஒரு இராணுவத் தொப்பி.

02
நான் உன் முத்தத்திற்காகவும்
பேனாக்களை எடுத்துச் செல்கிறேன்.

நாம் குழந்தைகள் நிறைந்த வீட்டில்
சோறு
சமைத்துக் கொண்டிருந்த பொழுது
படலை துண்டு துண்டாய்
சிதைந்து போனதை நீ கண்டாய்.

சிதைந்த நகரத்தில்
திறந்திருக்கும் தேனீர்க்கடைக்கு
உன்னை இன்னும் அழைத்துச் செல்லவில்லை
நான் இன்னும்
உன்னை முத்தமிட வேண்டும்
குழந்தைகள்
அழைத்து வரப்பட்ட நகரத்தில்.

மிகவும் பிரியத்துடன்
முத்தமிடக் காத்திருந்த நாளில்
குருதி கசிந்த கைகளினால் எழுதிய
கடைசிக் கவிதையினோடு
நான் கொலை செய்யப்பட்டிருந்தேன்.
-------------------------------------------

No comments: