Monday, December 1, 2008

வற்றாத காலையில் வருகிற அச்சுறுத்தல்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________
01.
பேய் ஓட்டிவருகிற
மோட்டார் சைக்கிள் என்னை மோதுவதை
முதலில் கனவில் கண்டேன்.

தூக்கம் குழம்பிய காலையில்
துப்பாக்கியால்
எழுதப்பட்ட சுவரொட்டி
அறையின் கதவினை
தட்டிக்கொண்டிருந்தது.

அச்சுறுத்தல் பட்ட காலையில்
தேனீரில் குருதி கலந்திருக்க
குளியலறையில்
பேய்கள் விலகிச் செல்கின்றன.

பெயர் குறிப்பிடப்பட்ட
பதினான்கு பேரும்
செல்லுகிற தெருவில்
நிறையப்பேர்களிடையில்
தனிமை எதிர் வந்தது
எல்லோரையும் தேடி
துவக்கு வெறி பிடித்தலைகிறது.

யாரும் பக்கத்தில்லாத நேரத்தில்
பின்னால் ஒருவன்
நின்று கரைய
முன்னால் நிறையப்பேர்
குதிக்கிறார்கள்
கண்கள் பெருத்தலைகின்றன.

தெரு குறித்து நிறைய
ஆசையிருக்கிறது
சுருங்கிய பகலில்
கத்திகள் கூர்மையுடன்
பசித்திருக்கிற கரைகளிலிருந்து
சைக்கிள் வெட்டுப்படுகின்றன.

பேய்கள் ஒட்டுகிற
மோட்டார் சைக்கிள் என்னை
பின் தொடருகிற
மாலைக்கும் இரவுக்கும்
இடையில்
நான் மறுநாட் கலையை இழந்தேன்.

இன்று அச்சுறுத்தப்பட்ட காலையாகி
இருளத்தொடங்கியது.

தூக்கம் கலைத்து
கொலை செய்த சுவரொட்டி
என்னை தின்றபடி
நகரமெங்கும் திரிகிறது.
---------0---------------------------0-------------------------------------------

02.
உன்னையும் தங்கச்சியையும்
எல்லாவற்றையும்
உருவி எடுத்த வெள்ளம்
அதே காலையில் என்னையும்
மூழ்கடிக்க காத்திருந்தது.

நெத்தலி ஆறு தருமபுரம் ஆறாகி
உனது தடிகளான வீட்டை
பறித்துச் செல்கிறது.

எல்லோருடைய கண்ணீரும் குருதியும்
கரைந்து கொண்டிருக்கிற
கனவுகள்
ஆறுகளை மீறி எழுந்தன.

நீ வெள்ளத்தின் துயரங்களை
கூறிக்கொண்டே இருக்கிறாய்.
என்னை விழுங்க காத்திருக்கிற
வெள்ளம் குறித்து நான் எதைப்பேசுவது?

அகதிகளை மேலும் அகதிகளாக்கும்
மழையில் நான் அலைந்தேன்
எனது நகரத் தெருவின் இடைகளில்
உன்னையும் தங்கச்சியையும்
கொட்டும் அடைமழையில் கண்டேன்.

பெருமழையில் மோதுகிற
போராளிகள் உன்னை மீட்க
வெள்ளத்தினிடையில்
எனது முகம் கண்டாய்
உனது கண்ணீரும் அழுகையும்
வெள்ளமாகி
படிகளால் ஏறி
எனது அறையில் நுழைந்தது.

போர் அலைக்கிற தெருவில்
பெய்த மழையும் சூழ்ந்த வெள்ளமும்
உன்னை அச்சுறுத்த
'இறுதி' என மிரட்டுகிற
மரணப் பட்டியலில் நான் தெரிவு செய்யப்பட்டிருப்பதை
எப்படி நான் உன்னிடம் சொல்லுவேன்?

நமக்கிடையில்
வற்றாத வெள்ளம் அடித்துப்பாந்து சூழந்திருக்க
பெருமழை தொடர்ந்து பெய்கிறது
அடிமைப்படுத்த முனைகிற
அதிகாரம் மற்றும் அதன் வியூகங்கள் போல.
-------0----------------------0-------------------------------------------------
24.11.2008 "இறுதி எச்சரிக்கை" என்கிறது மரண அச்சுறுத்தல் நோட்டீஸ்

2 comments:

தமிழ்நதி said...

எப்போதும் மரணம் சூழத் திரிவதானது மிகக்கொடுமை தீபச்செல்வன். என்னதான் செய்துகொண்டிருந்தாலும் நெஞ்சில் இருக்கும் வலிபோல நீங்காதிருக்கும் இருள் அது. என்ன செய்வது...? வார்த்தைகளால் விளைந்ததை வார்த்தைகளால் களையமுடியாதெனத் தெரிந்தும்... சொல்லாமல் நீங்குவதும் குற்றவுணர்வைத் தருகிறது.

ஃபஹீமாஜஹான் said...

அன்பின் தீபச்செல்வன்

எழுதுங்கள் என்று சொல்ல அச்சமாக உள்ளது. ஏனெனில் கடந்த காலம் மிகவும் வலிதரும் செய்திகளை எம்மிடையே விட்டுச் சென்றுள்ளன.

எழுதுவதை நிறுத்திவிடுங்கள் என்று சொல்லவும் முடியாமல் உள்ளது.

சொந்தப் பெயரில் எழுதாத வேளையிலும் அச்சுறுத்தலில் சம்பந்தப் பட்டுள்ளவர்கள் உங்களை அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். ஆபத்தைக் காவிக் கொண்டு அவர்கள் பின்தொடரக் கூடும்.

கண்காணிப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் கொஞ்ச காலத்துக்கு உங்கள் எழுத்துச் செயற்பாடுகளை ஒத்திவையுங்கள். அல்லது வெளியே இருக்கும் நண்பர்களிடம் உங்கள் படைப்புகளை அனுப்பி இன்னொரு பெயரில் அவற்றை வெளியிடச்செய்யுங்கள்.

கண்காணிக்கப் பட்டுவருகிறீர்கள். எனவே எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். உயிருக்கு எந்தப் பெறுமதியும் இல்லாத தேசத்தில் நாம் வாழ்கிறோம்.