Friday, November 7, 2008

சில சொற்கள் குரல்கள் மற்றும் முகங்கள்


-----------------------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
____________________________________

கேட்க முடியாத செய்தியுடன்
பேசமுடியாத சொற்களும்
பார்க்க முடியாத முகங்களும்
பழைய வானொலிப்பெட்டியினுள்
கொட்டி வைக்கப்பட்டிருந்தன.
---0---0----0-----------

01. சொற்கள் மறைக்கப்பட்ட பத்திரிகை

சொற்களை மறைத்து
வெளி வந்த பத்திரிகை
இடையில் கிழித்தெரியப்படுகிறது
பத்திரிகையின் மொழி ஊமையாக
கண்களற்றவர் வாசிக்கிறார்
ஊமைகளின் பத்திரிகை
வெளிவர மறுத்துவிடுகிறது
எடுத்துச்சென்றவரின்
முகம்
பின் பக்கம் பதிந்திருக்க
வனங்கள் அழிந்த மணம்
முன்பக்கத்தில் பெருக்கெடுக்கிறது
பயங்கரக்கோடுகள் நிறைந்த
ஒரு பத்திரிகை
விடியமுடியாத காலையில்
வந்து எழுப்பிவிட்டு
வீடு துடிக்கிற செய்திகளை
நிரப்பிவிடுகிறது.
---0---0----0-----------

02.குரல்கள் அடங்கிய வானொலி

பற்றிகள் தடைசெய்யப்பட்ட
வானொலியின்
அன்றனா உடைந்துவிட்டது
இருட்டு வாசிக்கும் செய்தியிலிருந்து
பேய்கள் வெளியேறுகின்றன
அலைவரிசைகள் குழம்பி வழிய
வானொலியின் கோபுரம்
பிடுங்கி எறியப்படுகிறது
தீடிரென நின்றுவிடுகிற செய்தியை
கேட்டுக்கொண்டிருக்க
வானொலி செத்துவிடுகிறது
பூட்டிவிட்ட
வானொலியிலிருந்து
அவலக்குரல் ஒலித்தபடியிருக்கிறது.
---0---0----0-----------

03.குருதி வெளிவரும் தொலைக்காட்சி

குழந்தைகளின் நிகழ்ச்சியை
வேட்டி குழப்பி விடுகிறது
புற்கள் முளைத்த தொலைக்காட்சி
பேய்கள் இருந்து பேசுகின்றன
வனங்களை தின்று
மண்ணைப் பிளந்து
போகும் நடனங்களை
காண்பிக்கின்றன
அழும் முகங்களை காய்ச்சி
கூழ் குடிக்கும் நிகழ்வுகளை ஓளிபரப்பின
அழிவின் உக்கிரம் கொண்டு
மிரட்டுகிறது விளம்பரம்
தலைகளை செய்தி கணக்கெடுக்கிறது
வனங்களை அழிப்பதை
நேரடியாக ஒளிபரப்புகிறது
இரத்தம் தொடர்ந்து
வுடிகிற
தொலைக்காட்சி சின்னத்திற்கு கீழாய்
அழும் குழந்தையின் முகம்
தொங்குகிறது
அலைவரிசைகளை பிடித்து
தின்று ஏப்பமிடுகிற
ஒரேஒரு தொலைக்காட்சியின்
முன்னால்
ஒரு கிழவன் கொலைசெய்யப்படுகிறான்
கண்களை பிடுங்கி விட்டு
மிக நீண்டு செல்கிற இரவென்றில்
பிசாசுகளின் கதைகளை
ஒளிபரப்பி மிரட்ட
வெளிவருகிற பயங்கரம்
வீட்டை நிரப்புகிறது.
---0---0----0-----------

04.பேய்முகங்களை பரப்புகிற இணையத்தளம்

மிகவும் அவசரமாக வெளியிடப்பிட்ட
தணிக்கையூட்டிய செய்திகளை
பிரதியெடுக்கப்படுகின்றன
பேய்முக இணையத்தளத்திடமிருந்து
முகம் இழந்த கிராமத்தின்
குருதி வடிய படங்களை
அவசரமாக பதிவேற்றுகிறது
எழுத்துக்களை விழுங்கி
விசைப்பலகைகளில்
முட்கள் முளைத்திருக்க
தொடர்பை இழந்து
துண்டிக்கப்பட்டு விடுகிற
தனியாள் தளங்கள்
துடித்துக்டிகாண்டிருக்க
முன்னுக்கு வந்து நிற்கிறது
பாதுகாப்பு இணையத்தளம்
அழிவுக்கான செய்திகளை அச்சேற்றிவிட்டு
மறுமொழிகளின் முன்பாக
துப்பாக்கியை நீட்டுகிறது
சிரிக்கும் குழந்தையின்
முகம் விரிந்த தளத்தை
மெல்ல தின்றுவிட்டு
தெப்பியை அணிந்து
தலையை குனிந்திருக்கிறது
---0---0----0-----------

கேட்க முடியாத செய்தியுடன்
பேசமுடியாத சொற்களும்
பார்க்க முடியாத முகங்களும்
பழைய வானொலிப்பெட்டியினுள்
கொட்டி வைக்கப்பட்டிருந்தன.

------------------------------------------------------------
07.11.2008

No comments: