Friday, December 26, 2008

என்னைத் தொடருகிற மேலுமொரு இரவு

-------------------------------------------------
தீபச்செல்வன்
___________________________________

குற்றம் சாட்டப்பட்டிருக்கிற இரவு
என்னை வெளியில் விடுகிறது.
பாதியில் திரும்பி விடுகிற தெருவில்
என்னை யாரோ தேடிவர
குறையில் கீழே போட்டு நசித்த
சிகரட்டை மீட்டுச் செல்கிறார்கள்.

பயங்கரம் மிகுந்த இரவில்
நான் போர்த்தியிருக்கிற
போர்வையின் வெளியில்
யாரோ உலவித்திரிகிறார்கள்.

அறைக்கு மேலாய் பறக்கிற
ஹெலிகாப்டர்
கனவில் புகுந்து
ஒரு குடியிருப்பை தாக்குகிறது
தூக்கம் போராகிவிட
பகலை துவக்கு தேடித்திரிகிறது.

தடைசெய்யப்பட்ட சொற்களை
எழுத தொடங்கிய மேசையில் அதனுடன்
பேனையும் தாளும்
என்னை விட்டு விலகுகிறது.

இரவு ஒரு முகமூடியை அணிந்து
மிரட்ட அதனிடையில்
கறுத்தத் துணியால் மூடிய மோட்டார் சைக்கிள்கள்;
சுற்றிக் கொண்டிருக்கின்றன.
தெருக்கள் சுருங்கிப்போயின.
குறைச் சிகரட்டோடு வருகிற
கடித்தில் சவப்பெட்டி வரையப்பட்டிருந்தது
புத்தக மேசை கடலில் குதித்துவிடுகிறது
மரணம் பற்றி வழங்கப்பட்ட
தீர்வை குறித்து
என்னால் எதையும் கூறமுடியவில்லை.

கதவு பயத்துடனிருந்தது
பயம் விளைவித்த சொற்களை
துவக்கு பயமுறுத்தியது.
சொற்களால் எல்லாவற்றையும்
கடக்க முடிகிறது.

இலக்கங்கள் அச்சுறுத்துகிற
தொலைபேசியில்
நான் தொடர்ந்து பேசுகிறேன்.
துவக்கின் அதிகாரம் சிரிக்கிற சத்தத்தில்
வழமையாக
விலகிச் செல்கிற தெருவில்
தவறவிடப்பட்டவனைப் போலிருக்க
இந்தக் சொற்களுடன்
மேலுமொரு பகல் முடிந்து போகிறது.

தெருவில் சொற்கள் தனித்திருக்கின்றன
இறந்த பகலை மேலுமொரு இரவு தொடருகிறது
-------------------------------------------------------------------------
நன்றி: விழிப்புணர்வு


No comments: