Sunday, November 8, 2009

சொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி



தீபச்செல்வன்
__________________
எடுபடாது கிடக்கிற உனது வாக்குமூலம்
தராசில் வைக்கப்பட்டபோது சரிந்து போகிறது நீதிமன்றம்.
குழந்தைகள் தெருவுக்கு வருவதற்கு
அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.
உனது காலம் முழுவதையும் சிறையிடுகிறார்கள்.
யாரும் பேசுவதாயில்லை
விலங்குகளை மாட்டுகிற கைகளைப்பற்றி.
சொற்களடங்கி அதிகாரத்தின் கால் விரிந்தகலுகிறது.
வெருண்டு கிடக்கின்றன காலத்தின் சொற்கள்.

குற்றம்சாட்டி
கைது செய்து இழுத்துச் செல்கையிலும்
இத்தனை நாட்களாய் சிறையிருக்கையிலும்
அஞ்சும் கண்களால் நிரம்பியிருந்தன வெள்ளைத்தாள்கள்.
எல்லாப் பத்திரிகையிலும்
ஏக்கம் பொருந்திய தலைப்புச் செய்தியாய்
வடிந்து கொண்டிருக்கிறது உனது முகம்.
பேனைகளையும் தாள்ளையும் எச்சிரிக்கிறது
வளைத்திருக்கிற கம்பி.

காலம் அரசனைப் பார்த்து
மிகவும் அஞ்சிக்கொண்டிருக்கிறது.
எதைத்தான் பேச முடியும்?
வாய்கள் கட்டப்பட்டு அரச மரங்களை
சுத்திக்கொண்டிருக்கின்றன ஒலிவாங்கிகள்.

கொடிய ஆட்சியின்
கழுத்து நெறிக்கும் சக்கரங்கள்
இரவிலும் பகலிலும் மோதி எழுகிற
பெருஞ் சத்த்தில் தகர்ந்து போகிறது முழுவதும்.
விலங்கை மாட்டி
கவலில் கொண்டு செல்லும்பொழுது
சொற்கள் வாயில் வழிந்து கொட்டிக்கொண்டிருந்தன.

தடுக்கப்பட்ட சொற்களால் நிரம்பிய சிறைச்சாலையில்
கழிக்க முடியாத ஒரு இரவு
பல யுகத்தின் சித்திரவதைகளை வைத்திருக்கின்றன.
அதிகாரம் ஆடுகிற நடனத்தின் உச்சத்தில்
சனங்கள்
எங்கும் எலும்புக்கூடுகளாகி விழுந்துகொண்டிருக்கின்றனர்.
பெரும் சத்தமிடுகின்றன அதிகாரத்தின் கட்டளைகள்.
முழுச் சொற்களையும் களைந்து விடுகிறது
சிறைச்சாலையின் ஓலம்.

காலம் வதைகளால் நிரம்பிய நரகமாக
உனது கடைசிக் குழந்தையின் முத்தம் சிதறிக்கொட்டுகிறது.
இணையத்தில் பரவிக்கொண்டிருக்கிறது
விலங்கிடப்பட்ட உனது கைளில்
படர்த்தியிருக்கும் பலி.
நிராகரிக்கப்பட்டிருக்கின்றன
உனது குழந்தைகள் கொண்டு வந்த வாக்குமூலங்கள்.

எல்லாக் காலங்களையும் பறித்துக்கொண்டு
முகத்தை கம்பிகளால் பின்னி அடைக்கும்படி உத்தரவிட்ட
முதிய நேரத்திற்கு சற்று முன்பான பொழுதில்
எல்லோரும் நீமன்றத்தில் நிற்கையில்
அடங்கிக்கொண்டிருந்தது சிறைச்சாலையில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த பெருங்கடல்.
சிறைச்சாலைக்கும் நீதிமன்றத்திற்கும்
இடையில் கொட்டிக்கிடந்த உனது சொற்களை
பொறிக்கிக்கொண்டிருக்கின்றனர் உனது குழந்தைகள்.
-------------------------
(2008ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் திகதி முதல் இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் திஸாநாயகத்திற்கு 31.08.2009 அன்று மேல் நீமன்றம் பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் அவசரகாச்சட்டத்தின் கீழ் 20 வருட கடுழிய சிறை தண்டனையை வழங்கியிருக்கிறது.)

1 comment:

Theepachelvan said...

ஊடகவியலாளர் திஸ்ஸாநாயகம் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மனதுக்கு ஆறுதல் தருகிறது. இப்பொழுது எதுவும் பேச மறுக்கும் சூழ்நிலையில் திஸ்ஸநநாயகம் விடுதலையாகியருக்கிறார். அவருக்கு கடுழியச் சிறை விதிக்கப்பட்ட பொழுது இந்தக் கவிதை எழுதப்பட்டது.