Tuesday, March 31, 2009

பாழ்நகரத்தின் பொழுது

---------------------------------------------------------
தீபச்செல்வன்
---------------------------------------------------------------
பாழடைந்த தெருவில் சொறுகப்பட்டவர்களின்
குருதியின் மேலால்
வடிகிறது சொற்களுடன் கலந்திருந்த இளம் கனவு.

மற்றும் சில இரவுகளை பறித்த சந்தியில்
அச்சத்தின் கனவு தொடங்குகிறது.
விடிந்திராத இளங்காலையை நசித்து
முடிவுபடுத்துகிற கறுப்பான பின்னேரத்தில்
உதிர்த்தெறியப்பட்டன எனது சொற்கள்.

தொலைபேசி எங்கும்
துவக்கு புகுந்து
அலரிக்கொண்டிருக்கிற இராத்திரியில்
எங்கும் செல்ல இயலாது
தோற்றுப்போன சொற்கள்
கட்டிலின் கீழாய் கிடந்து
முதுகை குத்திக் கொண்டிருக்கின்றன.

தூக்கலிடும் நாட்களைப் பற்றியும்
மரணம் அளிக்கும் முறையினைப்பற்றியும்
அவர்கள் என்னிடமே சொல்லிச் சென்றனர்.
விலங்கிடப் பட்ட சொற்கள்
கிழே துடித்தலைய
அதிகாரம் என்னை தூக்கி
மின்கம்பத்தில் சொறுகுகிறது.

பாழடைந்து போயிருக்கிற நகரத்தில்
மண் தின்கிற கால்களை
ஊடுருவி
ஒற்றை நாய் வந்து கால்களை நக்கிச் செல்லுகிறது.
வரிசையாக புன்னகைகளால்
துவக்கு
சோதனையிட்டு பிடுங்கிக்கொண்டிருக்கிறது
இயல்பான வாழ்வை.

கூர்மையான துவக்கு
எதை வேண்டுமானாலும் செய்யும்.
என்னை உருவி எடுத்துக்கொண்டு
அனுப்புகிற பழுதடைந்த பொழுதில்
தெருவிளக்குகள் அணைந்துபோய்விட்டன.

கறுப்புத்துணியால் போர்த்து
வந்திருக்கிறது பிரியமான நண்பனின் முகம்.
விளக்கற்றுக் கிடக்கிறது வீடுகள்.

நான் கண்டேன் சிவப்பு மையால்
நனைத்தெடுக்கப்பட்டிருக்கிற எனது பெயரை.
பீர்வீக நகரத்திலிருந்து
பிடுங்கப்பட்டிருக்கிற எனது வாழ்வை.
துடிதுடித்துக் கலைகிற என் கனவுகளை.

கதவுகளுக்குப் பின்னால்
யாரும் அறியாத இருட்டில் ஒதுங்கியிருக்கிறது
பாழ் பொழுதொன்றில் விலங்கிடப்பட்ட சந்தி.

--------------------------------------------------------
(10.02.2009 5.00-6.00 எச்சரிக்கப்பட்ட மாலைப்பொழுது)

(புகைப்படம்:தீபச்செல்வன், யாழ்ப்பாணம் கொக்குவிலில் 13.12.1987 இல் இந்தியராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக எடுக்கப்பட்ட நினைவுக்கல் சிதைக்கப்பட்டிருக்கிறது)

No comments: