Friday, May 23, 2008

இரவு மரம்


எழுதியவர்___________________________
--------------------------தீபச்செல்வன்

-------------------------------------------------------------

இரவு முழுவதும் நிலவு
புதைந்து கிடந்தது
நெடுஞ்சாலையின் அருகிலிருக்கும்
எங்கள் கிராமமே
மண்ணுக்குள்
பதுங்கிக் கிடந்தது
வானம்
எல்லோரும் வெளியேறிய
வீட்டின்
சுவரில் ஒட்டியிருந்தது.

நேற்று இறந்தவர்களின்
குருதியில்
விழுந்து வெடித்தன
குண்டுகள்
நாயும் நடுங்கியபடி
பதுங்குகுழியின்
இரண்டாவது படியிலிருக்கிறது.

ஒவ்வொரு குண்டுகளும்
விழும் பொழுதும்
நாங்கள் சிதறிப்போயிருந்தோம்
தொங்கு விளக்குகளை
எங்கும்
எறிந்து எரியவிட்டு
விமானங்கள்
குண்டுகளை கொட்டின.

எங்கள் விளக்குகள்
பதுங்குகுழியில்
அணைந்து போனது
இரவு துண்டுதுண்டாய் கிடந்தது
பதுங்குகுழியும் சிதறிப்போகிறது
எங்கள் சின்ன நகரமும்
சூழ இருந்த கிராமங்களும்
தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தன.

மெதுவாய் வெளியில்
அழுதபடி வந்த
நிலவை
கொடூரப்பறவை
வேகமாய் விழுங்கியது.

இரவு முழுக்க விமானம்
நிறைந்து கிடந்தது
அகோர ஒலியை எங்கும்
நிரப்பிவிட
காற்று அறைந்துவிடுகிறது.

தாக்குதலை முடித்த
விமானங்கள்
தளத்திற்கு திரும்புகின்றன
இரவும் தீப்பிடித்து
எரிந்துகொண்டிருந்தது
மரங்களும் எரிந்து கொண்டிருந்தன
சிதறிய பதுங்குகுழியின்
ஒரு துண்டு
இருளை பருகியபடி
எனது தீபமாய் எரிகிறது
மரமாய் வளருகிறது..
-------------------------------------------
30.06.2007 நாட்களில் தீபம் http://deebam.blogspot.com/ என்ற எனது வலைப்பதிவு பதுங்குகுழிச்சூழலிலிருந்து தொடங்கப்பட்டது.

1 comment:

டி.அருள் எழிலன் said...

எனது இடுகைக்கு நீங்கள் இட்ட பின்னூட்டத்தை நான் இன்றுதான் பார்த்தேன். நீங்கள் சொல்கிற கருத்து உண்மைதான். வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையிலேயே ஈழபிரச்சனையை ஆசியாவின் அத்தனை நாடுகளும்.அணுகுகிறது. அமெரிக்காவுக்கு காவடி தூக்குவதுதான் இன்றூ இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. நேருகாலத்திய அணிசேராக் கொள்கையை காற்றில் பரக்க விட்டவர்கள் அமெரிக்க ஆதரவுக் கொள்கையை அயலுறவுக் கொள்கையாக கொண்டிருப்பதன் அபத்தம் புரிக்றது.உலகம் முழுக்க இரு அணிகளாக நாடுகள்பிரியும் சூழல் இன்றூ உருவாகி வருவதை இன்றூ அவதானிக்க முடியும். சோஷலிச,மற்றும் இஸ்லாமிய கருத்தியலால் இன்றூ உலகம் இரண்டு துருவங்களாக பிரிந்து கூடிவருகிறது. ஈரானும்,சைனாவும்,ஒரு பக்கமாக வெனின்சூலா,லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒரு பக்கமாகவும் திரட்சியாக உருவாகி வருகிறது.இதில் வேதனை என்ன வென்றால் உலகெங்கிலும் நடக்கும் இன விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கும் போக்கை இம்மாடதிரி எதிர் அரசியலை முன் வைக்கும் நாடுகள் ஆதரித்து வந்தது.(இந்தியா பாலஸ்தீனத்தை ஆதரித்தது) இன்றூ பாலஸ்தீனத்துக்கு எதிரியான இஸ்ரேலுக்கு உளவு ஏவுகணையை ஏவுவது இந்தியாதான்.ஆக அமெரிக்க ஆதரவு நாடுகளும் இன விடுதலைப் போராட்டங்களை மறுக்கிறது, அமெரிக்காவின் எதிர் நாடுகளான சீனா,ஈரான் போன்ற நாடுகளும் இன் விடுதலைப் போராட்டங்களை எர்த்க்கின்றன.அமெரிக்காவின் எதிர் நாடுகளும் இனவிடுதலைப் போராட்டங்களை ஒடுக்குகின்றன. அப்படி ஒடுக்குவதன் மூதல் பிற நாட்டி கேந்திரங்களை கண்காணிக்கும் ராணுவ அரசியலை விரிவு படுட்துகிறார்கள்....விரிவாக எழுத நினைக்கிறேன் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.உங்கள் கவிதை நன்றாக இருந்தது. நன்றீ தொடர்ந்து எழுதுங்கள்.