Thursday, January 8, 2009

குழந்தைகள் பலிவாங்கப்படுகிற நகரம்


----------------------------------------------------------------------------
தீபச்செல்வன்
____________________________________

இங்கும் ஒரு தாயின் அழுகைதான்
நகரத்தை உலுப்புகிறது.
குழந்தைகள்தான்
பலியிடப்பட்டு அடுக்கப்படுகின்றனர்.

பேரீட்சைமரங்களின் கீழே
பாலஸ்தீனக் குழந்தைகள் தென்னை மரங்களை
தேடுகின்றதை நான் கண்டேன்.

எனது அம்மாவே நீ எங்கும்
குருதி சிந்துகிறாய்.
நமக்காய் குழிகளைக்கூட
வழங்க பிடிக்காத அதிகாரத்திடம்
குழந்தகைள் திரிகிற
நகரம் பலியிடப்படுகிறது.

காஸா எல்லைகளில்
இலங்கைப்படைகள்; மோத வருகிறது.
கிளிநொச்சியை இஸ்ரேல்படைகள்
முற்றுகையிடுகிறது.

குழந்தைகள் என்ன செய்தார்கள்?

நமது குழிகளில் கிடக்கிற
குழந்தைகள் அங்கு அடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் மேலுமாய்
சனங்கள் தோற்றுப்போகிற அதிகாரத்தை
கடக்க இயலாதிருக்கிறது?

அந்த நகரமும்
எரிந்துகொண்டுதான் இருக்கிறது.
குழந்தைகள்தான் உலகத்திடம்
பலிவாங்கப்படுகிறார்கள்.
தாய்கள்தான் விலைகொடுக்கிறார்கள்.

சிதைந்த சுவர்களினிடையில்
இன்னும் நுழைய
காத்திருக்கும் விமானம்
எனக்கு மேலால் அலைந்து திரிகிறது.

விழப்போகிற குண்டுகளிடமிருந்து
தப்புவதற்கு அலைகிற நம்மைபோலான சனங்களின்
குழியிலிடப்படுகிற நகரத்தில்
நானும் நசிந்து கிடக்க
காயங்களால் நீ அழுகிறாய்.

பாலஸ்தீனக் குழந்தைககளை
பலியிட அலைகிற
இலங்கை இராணுவத்தளபதி
வழிநடத்துவிக்கிற
காஸா எல்லையில் ராங்கிகள் முன்நகருகின்றன.

நகரத்துள் படைகள்
நுழைந்து குழந்தைகளை தேடுகிறபோது
நமது நகரத்தின்
அதே அழுகை ஒலி கேட்கிறது.

நெருப்புப்பிடித்து எரிகிற நகரத்தில்
அதன் புகையிடையில் நமது முகங்கள்
கிடந்து கறுப்பாகின்றன.

விமானங்கள் நகரத்தை
முழுமையாய் தின்று களிக்க
சாம்பலில் பிறண்டு அழுகிற தாயிடம்
நமது நகரத்தின் அதே
குருதிச்சொற்கள்தான் இருக்கின்றன.
-------------------------------------------------------------------------
01.01.2009,காஸா,பாலஸ்தீனம்.

No comments: