Sunday, April 27, 2008

சாபத்தின் நிழல்


எழுதியவர்_____________________________
--------------------------தீபச்செல்வன்

``````````````````````````````````````````````````````````````
குழந்தையின் சோற்றுக் கிண்ணத்தில்
நிரம்பியிருந்தது மரணம்
நிலவு
சாத்தானின் முகத்தோடிருந்தது
வானம்
தீராத சாபத்தின் நிழலில்
தோய்ந்திருந்தது.

கூர்மையான வாள்களாகியது கற்கள்
கூர்மையான கத்திகளாக
கூர்மையான துவக்குகளாக
மனிதர்களின் கைகளிற்குள்
நிரம்பியிருந்தன கற்கள்.

மனிதன் கற்களை தூக்கியது முதல்
விழுந்து கொண்டிருந்தது
இன்னொரு மனிதன்மீது.

கனிகளை புசித்தது முதல்
மனிதனுக்கு
ஆயிரம் முகங்கள்
ஆயிரம் கைகள்
ஆயிரம் கால்கள்
ஆயிரம் தலைகள்
முளைத்து நிறைந்தன.

கடவுள் முதல்
மனிதனிடம் தோற்றுப்போன வேளை
சாத்தானின் கை உயர்ந்த வேளை
சர்பத்தின்கதை தொடங்கிய பொழுது
சாத்தானின் கதை தொடங்கிய பொழுது
பாவமும் தொடங்கியது.

தெய்வங்களின் ஆயுதங்கள்
கோயில்களில் நிரம்பிக்கிடந்தன
அசுரர்களை அழித்த பாடல்களுடன்
பூஜை நடந்தது
பூக்களோடு
குருதியும் சதைகளும் படைக்கப்பட்டன.

மனிதனின் பரிணாமத்துடன்
கற்களும் வளர்ந்தன.

பசுக்களை திருடியபொழுது
தானியங்களை விதைத்த பொழுது
அவைகளுக்காய் போரிட்ட பொழுது
சாபத்தை விதைத்தான்
மரணத்தை அறுவடை செய்தான்
காயங்கள் குவிந்து கிடந்ததன.

மரணப்பூமியில் சாபக்குழந்தைகள் பிறந்தன
சாத்தானின் கதைகளுடன்
எறியப்பட்டுக்கொண்டிருக்கும்
கற் குவியல்களுக்கு இடையில்.
25.04.2008
``````````````````````````````````````````````````````

No comments: