Friday, May 23, 2008

இரவு மரம்


எழுதியவர்___________________________
--------------------------தீபச்செல்வன்

-------------------------------------------------------------

இரவு முழுவதும் நிலவு
புதைந்து கிடந்தது
நெடுஞ்சாலையின் அருகிலிருக்கும்
எங்கள் கிராமமே
மண்ணுக்குள்
பதுங்கிக் கிடந்தது
வானம்
எல்லோரும் வெளியேறிய
வீட்டின்
சுவரில் ஒட்டியிருந்தது.

நேற்று இறந்தவர்களின்
குருதியில்
விழுந்து வெடித்தன
குண்டுகள்
நாயும் நடுங்கியபடி
பதுங்குகுழியின்
இரண்டாவது படியிலிருக்கிறது.

ஒவ்வொரு குண்டுகளும்
விழும் பொழுதும்
நாங்கள் சிதறிப்போயிருந்தோம்
தொங்கு விளக்குகளை
எங்கும்
எறிந்து எரியவிட்டு
விமானங்கள்
குண்டுகளை கொட்டின.

எங்கள் விளக்குகள்
பதுங்குகுழியில்
அணைந்து போனது
இரவு துண்டுதுண்டாய் கிடந்தது
பதுங்குகுழியும் சிதறிப்போகிறது
எங்கள் சின்ன நகரமும்
சூழ இருந்த கிராமங்களும்
தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தன.

மெதுவாய் வெளியில்
அழுதபடி வந்த
நிலவை
கொடூரப்பறவை
வேகமாய் விழுங்கியது.

இரவு முழுக்க விமானம்
நிறைந்து கிடந்தது
அகோர ஒலியை எங்கும்
நிரப்பிவிட
காற்று அறைந்துவிடுகிறது.

தாக்குதலை முடித்த
விமானங்கள்
தளத்திற்கு திரும்புகின்றன
இரவும் தீப்பிடித்து
எரிந்துகொண்டிருந்தது
மரங்களும் எரிந்து கொண்டிருந்தன
சிதறிய பதுங்குகுழியின்
ஒரு துண்டு
இருளை பருகியபடி
எனது தீபமாய் எரிகிறது
மரமாய் வளருகிறது..
-------------------------------------------
30.06.2007 நாட்களில் தீபம் http://deebam.blogspot.com/ என்ற எனது வலைப்பதிவு பதுங்குகுழிச்சூழலிலிருந்து தொடங்கப்பட்டது.